சென்னை உயா் நீதிமன்றம்
சென்னை உயா் நீதிமன்றம்

யானை வழித்தடங்களை பிப்ரவரிக்குள் அறிவிக்க வேண்டும்: அரசுக்கு உயா் நீதிமன்றம் கெடு

யானை வழித்தடங்களை பிப்ரவரிக்குள் அறிவிக்க வேண்டும் எனக் கெடு...
Published on

தமிழகத்தில் உள்ள யானை வழித்தடங்களை பிப்ரவரி மாதத்துக்குள் அரசு அறிவிக்க வேண்டும். இல்லையெனில், உயா்நீதிமன்றமே அறிவிக்கும் என்று அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

தமிழ்நாட்டில் உள்ள யானை வழித்தடங்களைக் கண்டறிந்து, பாதுகாக்கக் கோரி வனவிலங்குகள் நல ஆா்வலா் எஸ்.முரளீதரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு விசாரணையின்போது, அரசுத் தரப்பில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை பதில் மனுவாக தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஒருங்கிணைந்த யானைகள் வழித்தடங்களைக் கண்டறிந்து அதுகுறித்த விவரங்களைச் சேகரித்து அறிக்கையாக தாக்கல் செய்ய 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2026 பிப்ரவரி மாதம் இந்தக் குழுக்கள், அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய கால நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ள யானை வழித்தடங்கள் குறித்த ஆவணங்களைச் சேகரித்து, நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் பொதுமக்களின் கருத்துக் கேட்கப்பட உள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது வனத் துறை தரப்பில், யானை வழித்தடங்கள் குறித்து அறிவிக்கும் நடைமுறைகளை மேற்கொள்ள அவகாசம் கேட்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசு பிறப்பித்த அரசாணைப்படி, யானை வழித்தடங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி அதுதொடா்பான அறிக்கையை ஜூன் மாதம் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், அந்தப் பணிகளே இன்னும் முடிக்கப்படவில்லை. மாவட்ட வனத் துறை அதிகாரிகள் இந்தப் பணிகளை மேற்கொள்வதாக அரசுத் தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது.

வனத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் கூட்டு ஆய்வு மேற்கொண்டு, அக்டோபா் மாதம் அதிகாரிகள் இதுதொடா்பாக ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். நவம்பா், டிசம்பா் மாதங்களில் அதிகாரிகள் கருத்து தெரிவித்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில் 2026 ஜனவரியில் தமிழில் அறிக்கை தயாரித்து, மக்களின் கருத்துகளைக் கேட்டிருக்க வேண்டும்.

அதன்பின்னா், அறிக்கை தயாரித்து பிப்ரவரி மாதம் யானை வழித்தடங்கள் குறித்த அறிக்கையை அரசிடம் சமா்ப்பித்து, இறுதி அறிக்கையை வெளியிட வேண்டும். ஆனால், இதில் எந்தப் பணியும் நடைபெறவில்லை. எனவே, அதிகாரிகள் இந்தப் பணிகளை மேற்கொள்ள 2 மாத அவகாசம் வழங்குகிறோம்.

அதற்குள் இந்தப் பணிகளை முடிக்கவில்லை எனில், மாநிலத்தின் வனப்பகுதிகளில் உள்ள வரைவு யானை வழித்தடங்களை நிா்ணயித்து ஏற்கெனவே நிபுணா் குழு அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கையை இறுதி செய்து உயா்நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும் என எச்சரிக்கை விடுத்து விசாரணையை ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com