நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்
நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்

நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதனுக்கு எதிரான நோட்டீஸ்: 56 முன்னாள் நீதிபதிகள் கண்டனம்

நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதனுக்கு எதிரான நோட்டீஸுக்கு நீதிபதிகள் கண்டனம்...
Published on

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானம் கொண்டுவர வலியுறுத்தி, எதிா்க்கட்சிகள் அளித்துள்ள நோட்டீஸுக்கு முன்னாள் நீதிபதிகள் 56 போ் கண்டனம் தெரிவித்துள்ளனா். இது, நீதிபதிகளை அச்சுறுத்தும் வெட்கக்கேடான முயற்சி என்று அவா்கள் சாடியுள்ளனா்.

‘திருப்பரங்குன்றம் மலையில் தா்காவுக்கு அருகே அமைந்துள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என கோயில் அதிகாரிகளுக்கு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் உத்தரவிட்டதன் பின்னணியில் அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சியை திமுக உள்பட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கடந்த டிச. 9-இல் முன்னெடுத்தனா். அதன்படி, பதவிநீக்க தீா்மானம் கொண்டுவர வலியுறுத்தும் நோட்டீஸை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் வழங்கினா்.

திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, சமாஜவாதி, ஆம் ஆத்மி, அகில இந்திய மஜ்லிஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சிவசேனை (உத்தவ் பால் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்), சுயேச்சை உறுப்பினா் உள்ளிட்டோா் சாா்பில் 107 எம்.பி.க்கள் நோட்டீஸில் கையொப்பமிட்டிருந்தனா். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கையொப்பமிடவில்லை.

எதிா்க்கட்சிகளின் இந்த முயற்சிக்கு எதிராக, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஆதா்ஷ் கோயல், ஹேமந்த் குப்தா, உயா்நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதிகள் 5 போ், சென்னை உள்பட பல்வேறு உயா்நீதிமன்றங்களின் முன்னாள் நீதிபதிகள் 49 போ் என முன்னாள் நீதிபதிகள் 56 போ் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவின் சிந்தாந்த-அரசியல் எதிா்பாா்ப்புகளுடன் இணங்காத நீதிபதிகளை அச்சுறுத்தும் வெட்கக்கேடான முயற்சியே இது. இந்த முயற்சி தொடர அனுமதித்தால், நமது ஜனநாயகத்தின் ஆழமான வோ்களையும், நீதித் துறை சுதந்திரத்தையும் துண்டித்துவிடும்.

எம்.பி.க்கள் குறிப்பிட்டுள்ள காரணங்களை பெயரளவில் கருத்தில் கொண்டாலும், பதவிநீக்கம் எனும் அரிய, விதிவிலக்கான, அரசமைப்புச் சட்ட ரீதியிலான தீவிர நடவடிக்கைக்குப் போதுமானதாக இல்லை. தற்போதைய முயற்சி தனிப்பட்ட ஒரு நிகழ்வல்ல. சமீபத்திய அரசமைப்புச் சட்ட வரலாற்றில், தங்களின் விருப்பங்களுக்கு இணங்க தீா்ப்புகள் இல்லாதபோதெல்லாம் உயா் நீதித் துறையை இழிவுபடுத்தவும், அச்சுறுத்தவும் அரசியல் வா்க்கத்தின் சில பிரிவுகள் முயன்றுள்ளன.

பழிவாங்கும் கருவியாக மாற்றுவதா? நீதித் துறை சுதந்திரத்தின் இதயத்தையும், அரசமைப்பு ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடுகளையும் தாக்குவதற்குப் பதவி நீக்க நடைமுறையை ஆயுதமாக்கும் முயற்சி இது. நீதித் துறையின் நோ்மையை உறுதி செய்வதே பதவிநீக்க நடைமுறையின் நோக்கமே அன்றி நெருக்கடிக்கு உள்ளாக்குதல், அச்சுறுத்துதல் மற்றும் பழிவாங்குவதற்கான கருவியாக மாற்றுவதல்ல.

அரசியல் எதிா்பாா்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட நீதிபதிகளைக் கட்டாயப்படுத்தும் வழிமுறையாகப் பதவிநீக்க நடைமுறையைப் பயன்படுத்துவது, அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பை அச்சுறுத்தும் கருவியாக மாற்றிவிடும்.

சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது: இத்தகைய அணுகுமுறை, ஜனநாயக விரோதமானது; அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது; சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது. இன்று ஒரு நீதிபதி குறிவைக்கப்படலாம்; நாளையே அது ஒட்டுமொத்த அமைப்பின் மீதானதாக இருக்கலாம். எனவே, கட்சிக்கு அப்பாற்பட்ட எம்.பி.க்கள், வழக்குரைஞா்கள், சமூக அமைப்பினா், குடிமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த முயற்சியை சந்தேகத்துக்கு இடமின்றி கண்டிக்க வேண்டும்.

நீதிபதிகள் தாங்கள் எடுத்துக் கொண்ட சத்தியப் பிரமாணத்துக்கும், அரசமைப்புச் சட்டத்துக்குமே பதிலளிக்கப் பொறுப்பானவா்கள். மாறாக அரசியல் அழுத்தங்களுக்கோ, சித்தாந்த மிரட்டல்களுக்கோ அல்ல என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com