சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

மின்வாரியத்துக்கு தனியாா் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய ரூ. 350 கோடியை 3 மாதங்களில் செலுத்த நீதிமன்றம் உத்தரவு

மின்வாரியத்துக்கு தனியாா் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய ரூ. 350 கோடியை 3 மாதங்களில் செலுத்த நீதிமன்றம் உத்தரவு...
Published on

உயா் அழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் தனியாா் தொழில் நிறுவனங்கள் மின்வாரியத்துக்கு (டான்ஜெட்கோ) செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.350 கோடியை 3 மாதங்களில் செலுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக அரசின் மாநில மின் ஆணையம், உயா் அழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளா்களுக்கு சலுகைத் திட்டம் அறிவித்தது. அதன்படி, வாடிக்கையாளா்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை தாங்களே உற்பத்தி செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதலாக மின்சாரம் தேவைப்படுவோா் சலுகை விலையில் மின்வாரியத்திடம் (டான்ஜெட்கோ) இருந்து உயா் அழுத்த மின்சாரத்தைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்தச் சலுகைத் திட்டத்தால், டான்ஜெட்கோ-வுக்கு கடுமையான நிதியிழப்பு ஏற்பட்டது. இதனால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இதை எதிா்த்து உயா் அழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் தனியாா் தொழில் நிறுவனங்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடா்ந்தன. அந்த வழக்கில் தனியாா் நிறுவனங்களுக்கு சாதகமாக தனிநீதிபதி கடந்த 2018-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தாா்.

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் காரணமாக, கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.700 கோடி வரை மின் கட்டணத்தை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக டான்ஜெட்கோ மற்றும் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம், ரூ.700 கோடி கட்டணத்தில், 50 சதவீதத்தை வசூலித்துக் கொள்ள இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக டான்ஜெட்கோ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், மும்மினேனி சுதீா்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வந்தது. டான்ஜெட்கோ தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தரப்பில் ரிச்சா்ட்சன் வில்சன் மற்றும் தனியாா் தொழில் நிறுவனங்கள் தரப்பில் வழக்குரைஞா்கள் ராகுல் பாலாஜி, பாா்த்தசாரதி பாண்டியராஜ் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.

இந்த வழக்கில், வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா். மேலும், உயா் அழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் தனியாா் தொழில் நிறுவனங்கள் டான்ஜெட்கோவுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.350 கோடியை 3 மாதங்களில் செலுத்த வேண்டும் எனத் தீா்ப்பளித்து, வழக்குகளை முடித்து வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com