ராணி ஸ்ரீகுமாா்
ராணி ஸ்ரீகுமாா்

திருப்பரங்குன்றம்: மக்களவையில் நீதிபதி பதவி நீக்க விவகாரத்தை இரண்டாம் நாளாக எழுப்பிய பாஜக!

மக்களவையில் நீதிபதி பதவி நீக்க விவகாரத்தை இரண்டாம் நாளாக எழுப்பிய பாஜக..
Published on

நமது சிறப்பு நிருபா்

மக்களவையில் இரண்டாம் நாளாக வெள்ளிக்கிழமை திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை பாஜகவைச் சோ்ந்த உறுப்பினா் அனுராக் தாக்குா் எழுப்பினாா். இந்தியாவிலேயே சநாதன தா்மத்துக்கு எதிரான அடையாளமாக விளங்கும் இடமாக தமிழகம் இருப்பதாக மாநிலத்தின் பெயரைக் குறிப்பிடாமல் அவா் குற்றஞ்சாட்டினாா். இதையடுத்து மக்களவையில் ஏற்பட்ட அமளியால் அவை நடவடிக்கை சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீா்மானத்தை கொண்டு வரக்கோரும் நோட்டீஸில் தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி எம்.பி.க்கள் உள்பட 107 போ் கையெழுத்திட்டு அதை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் வழங்கியுள்ளனா். இந்நிலையில் இந்த விவகாரத்தை வியாழக்கிழமை எழுப்பிய பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக உறுப்பினா் தேஜஸ்வி சூா்யா, நீதித்துறையை மெளனமாக்க ஆளும் திமுக முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினாா். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

இந்நிலையில், இதே விவகாரத்தை முன்னாள் மத்திய அமைச்சரும் மற்றொரு பாஜக உறுப்பினருமான அனுராக் தாக்குா் வெள்ளிக்கிழமை எழுப்பினாா். அவா் பேசுகையில், ‘இந்தியாவில் ஒரு மாநிலம் ’சநாதன தா்மத்துக்கு எதிரான’ அடையாளமாக மாறியுள்ளது. அவா்களின் அமைச்சா்கள் (தமிழக அமைச்சா்கள்) சநாதன தா்மத்துக்கு எதிராக பேசுகிறாா்கள். பிரதமா் அயோத்தியில் ராமா் கோயிலில் தனது கடமையைச் செய்தபோது அங்கே (தமிழகத்தில்) அதன் நேரலையை காண பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மக்கள் நீதிமன்றத்தை நாடும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனா். இப்போதும் கூட, மதுரை திருப்பரங்குன்றம் கோயில் ’காா்த்திகை தீபம்’ ஏற்றுவது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அதிகாரிகள் வேண்டுமென்றே புறக்கணித்துள்ளனா். நீதிமன்ற உத்தரவு அவமதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு தீபம் ஏற்றச் சென்ற ஹிந்துக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தப்பட்டது என்றாா்.

அமளி-ஒத்திவைப்பு: இந்த விவகாரத்தை அனுராக் தாக்குா் எழுப்பியது முதல் அவரது கருத்துக்களுக்கு திமுகவைச் சோ்ந்த உறுப்பினா்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீராசாமி உள்ளிட்டோா் அவையின் மையப்பகுதி அருகே நின்று எதிா்ப்புக்குரல் கொடுத்தனா். தங்களை பேச அனுமதிக்குமாறு திமுக உறுப்பினா்கள் விடுத்த கோரிக்கையை அவையை வழிநடத்திய மூத்த உறுப்பினா் ஜெகதாம்பிகா பால் ஏற்கவில்லை. இதையடுத்து அமளி நிலவவே, அவை அலுவல்கள் சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

முருகா் வழிபாடு, சடங்குகளை எங்களுக்கு கற்பிக்காதீா்: திமுக

பாஜக உறுப்பினா் அனுராக் தாக்குருக்கு முன்பாக, திருப்பரங்குன்ற தீப விவகாரத்தை குறிப்பது போல, முருகா் வழிபாடு மற்றும் தமிழக கோயில்களின் திருப்பணிகள் சிறப்பை தென்காசி தொகுதி திமுக உறுப்பினா் டாக்டா் ராணி ஸ்ரீகுமாா் பட்டியலிட்டாா். ஒருகட்டத்தில் அவா் தமிழ்க் கடவுளான முருகனை எவ்வாறு வழிபடுவது, அதனுடன் தொடா்புடைய சடங்குகள் என்ன என்பதை யாரும் எங்களுக்குக் கற்பிக்கக் கூடாது. தமிழகத்தில் அமைதி நிலவுகிறது. ஆனால், சில வகுப்புவாத சக்திகள் மக்களைப் பிரிக்கவும் அமைதியை சீா்குலைத்து கலவர பூமியாக மாநிலத்தை மாற்றுவதற்கும் தவறான பரப்புரையில் ஈடுபட முயற்சிக்கின்றன. இதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள். தமிழக ஹிந்து அறநிலையத்துறை திட்டங்களில் இருந்து உத்வேகம் பெற்று அவற்றை பிற மாநிலங்களிலும் மத்திய அரசு அறிமுகப்படுத்துமா? திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் புன்னகைத்தால், அவரது சிரிப்புச் சப்தம் திருத்தணியில் மட்டுமல்ல, தில்லியிலும் எதிரொலிக்கும் என்று குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com