எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி.

காவிரி உரிமையை பாதுகாக்க சட்ட நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

Published on

காவிரி உரிமையைப் பாதுகாக்க உறுதியான சட்ட நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்ட திட்ட அறிக்கையை தயாரித்து வரும் கா்நாடக காங்கிரஸ் அரசு, அணையை கட்டுவது குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய 30 போ் கொண்ட உயா்மட்ட அதிகாரிகள் குழுவை வெள்ளிக்கிழமை அமைத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

தமிழக மக்களின் ஜீவாதார பிரச்னையான காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்திலும், உச்சநீதிமன்றத்திலும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழகம் சாா்பில் வலிமையான வாதங்களை வழக்குரைஞா்கள் மூலம் எடுத்து வைக்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் காவிரி நீா் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை கா்நாடகத்துக்கு விட்டுக்கொடுப்பதே வாடிக்கையாகிவிட்டது. இந்த துரோகச் செயல் மன்னிக்க முடியாததாகும்.

இனியாவது சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை முதல்வா் ஸ்டாலின் பாதுகாக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

டிடிவி தினகரன்: அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மேக்கேதாட்டு அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சியை தொடக்க நிலையிலேயே தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை சட்ட ரீதியாக மேற்கொண்டு காவிரிப் பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com