

கோவையில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் சரி வர மூடப்படாததால் அதிக பாரத்துடன் வரும் கனரக வாகனங்கள் சாலையில் சிக்கிக் கொள்ளும் ஆபத்து அதிகரித்து வருகிறது.
இதுபோன்று, சாலைகளில் கனரக வாகனங்கள் சிக்கிக் கொள்வதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள்.
கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளது. இதனால் சாலையில் செல்கின்ற வாகனங்களும் அடிக்கடி பள்ளத்தில் சிக்கி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை, கணபதி மணியகாரம்பாளையம் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பாதாள சாக்கடை குழியில் லாரி ஒன்று சிக்கிக் கொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்குப் பின்பு கிரேன் மூலம் லாரி அங்கு இருந்து மீட்கப்பட்டது.
மேலும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளின்போது அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில் சேதம் அடைந்து குடிநீர் வெளியேறி வருகிறது. அதில் இருந்து வெளியேறும் குடிநீர் அங்கு உள்ள வீதிகளில் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் விபத்துகள் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
இந்நிலையில் கோவை, கணபதி அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியில் செங்கல் சூலையில் இருந்து வீடு கட்டும் பணிக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட செங்கல் அப்பகுதியில் ஏற்கனவே தோண்டப்பட்டு மூடப்பட்டு இருந்த பாதாள சாக்கடைக் குழியில் சிக்கிக் கொண்டது.
இதனால் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேலும், மற்றொரு லாரி அங்கு கொண்டு வரப்பட்டு அதில் இருந்த செங்கல் வேறு லாரிக்கு மாற்றப்பட்டு வருகிறது.
தொடர்ந்து இதேபோன்று பல்வேறு பகுதிகளில் சாலைகளில் ஏற்படும் திடீர் குழிகளில் சிக்கிக் கொள்ளும் கனரக வாகனங்களால் சேதம் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.