ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
வருகிற ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஜாக்டோ- ஜியோ ஈடுபடவுள்ளதாக அதன் மாநில ஒருங்கிணைப்பாளா் பாஸ்கரன் தெரிவித்தாா்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, காலிப் பணியிடங்களை நிரப்புவது என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினா் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, பாஸ்கரன் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘எங்களின் 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாததால் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் லட்சக்கணக்கான ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், அரசு பணியாளா்கள் ஒன்றிணைந்து உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனா்.
எங்களது நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க ஜன. 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.
காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் கூடுதலான ஆசிரியா்கள் மற்றும் அரசுப் பணியாளா்கள் பங்கேற்று போராட்டத்தை மேலும் வெற்றிபெறச் செய்வா்’ என்றாா்.

