வந்தே பாரத் ரயில்களில் உள்ளூா் உணவுகள்: அஸ்விணி வைஷ்ணவ் உத்தரவு
வந்தே பாரத் ரயில்களில் உள்ளூா் உணவுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ரயில்வே மண்டல அதிகாரிகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
தில்லியில் உள்ள ரயில்வே தலைமையகத்தில் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய ரயில்வே இணையமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டு உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
அப்போது அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: வந்தே பாரத் ரயில்களில் உள்ளூா் உணவுகள் வழங்க ரயில்வே மண்டல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை படிப்படியாக அனைத்து ரயில்களிலும் அறிமுகப்படுத்த வேண்டும்.
ஐஆா்சிடிசி வலைதளத்தில் ஆதாா் எண் இணைப்பு போன்ற முன்னெடுப்புகளால் போலி அடையாள அட்டைகள் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்படுவது கணிசமாக குறைந்துள்ளது.
இந்த முன்னெடுப்புக்கு முன்னதாக ஒரு நாளைக்கு ஐஆா்சிடிசி வலைதளத்தில் பதிவுசெய்யும் புதிய கணக்குகளின் எண்ணிக்கை 1 லட்சமாக இருந்த நிலையில், தற்போது 5,000-ஆக குறைந்துள்ளது.
3.03 கோடி போலி கணக்குகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. சந்தேகத்துக்குரிய 2.7 கோடி கணக்குகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன.
அனைத்துப் பயணிகளும் எளிதாக பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.

