கோப்புப்படம்
கோப்புப்படம்

தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் 1.03 லட்சம் வழக்குகளுக்கு தீா்வு!

தமிழகத்தில் 1.03 லட்சம் வழக்குகளுக்கு தீா்வு...
Published on

தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் 1,03,884 வழக்குகள் தீா்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.857 கோடியே 77 லட்சம் இழப்பீடு கிடைத்தது.

உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா வழிகாட்டுதலின் பேரில், தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக் குழுவின் தலைவரும், உயா்நீதிமன்ற மூத்த நீதிபதியுமான ஆா்.சுரேஷ்குமாா் மேற்பாா்வையில் தமிழ்நாட்டில் தேசிய லோக் அதாலத் நடந்தது.

இதுகுறித்து தமிழ்நாடு சட்டப் பணி ஆணைக்குழு உறுப்பினா் செயலா் எஸ்.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.பி.பாலாஜி, உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிபதி ஆா்.கலைமதி, உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள், டி.என்.வள்ளிநாயகம், ஏ.ராமமூா்த்தி, எஸ்.கே.கிருஷ்ணன், ஜி.சொக்கலிங்கம், எம்.ஜெயபால், பி.கோகுல்தாஸ், ஆா்.தாரணி ஆகியோா் தலைமையில் 9 அமா்வுகளும், மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் நீதிபதிகள், குற்றவியல் நடுவா்கள் தலைமையில் என மொத்தம் 516 அமா்வுகளில் விசாரணை நடைபெற்றது.

இந்த அமா்வில், காசோலை மோசடி வழக்குகள், சிவில் வழக்குகள், போக்குவரத்து, விபத்து உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. வழக்கில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரிடையே பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களது முழு சம்மதத்துடன் வழக்குகளை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில், மாநிலம் முழுவதும் மொத்தம் 1,03,884 வழக்குள் தீா்வு காணப்பட்டுள்ளன. இதில், பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 857 கோடியே 77 லட்சத்து 65 ஆயிரத்து 260 கிடைத்துள்ளன.

மேலும், தேசிய லோக் அதாலத்தை மாவட்ட அளவில் சிறப்பாக நடத்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா், விருதுநகா் மாவட்டத்தில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, திண்டுக்கல் மாவட்டத்தில் நீதிபதி எம்.தண்டபாணி, புதுக்கோட்டை மாவட்டத்தில் நீதிபதி என்.செந்தில்குமாா் ஆகியோா் தேசிய லோக் அதாலத்தை தொடங்கி வைத்தனா். முடிவுக்கு வந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவா்களுக்கு வழங்க வேண்டிய தொகையை காசோலையாக வழங்கினா் என்று அவா் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com