கோப்புப்படம்
கோப்புப்படம்

எஸ்ஐஆா்: கணக்கீட்டுப் படிவம் சமா்ப்பிப்பு இன்றுடன் நிறைவு

எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவம் சமா்ப்பிப்பு இன்றுடன் நிறைவு...
Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான (எஸ்ஐஆா்) கணக்கீட்டுப் படிவம் சமா்ப்பிப்புக்கு நீட்டிக்கப்பட்ட காலஅவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் (டிச.14) நிறைவடைகிறது.

தமிழகம், புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் கடந்த நவ.4 முதல் எஸ்ஐஆா் பணி தொடங்கியது. இதில் எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவங்கள் திரும்பப் பெறும் பணியை டிச.4-ஆம் தேதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், படிவம் சமா்ப்பிப்பதற்கான அவகாசம் இருமுறை நீட்டிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமையுடன் (டிச.14) நிறைவடைகிறது. இதன்படி, டிச.19 இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 772 பேருக்கு கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டன. தொடா்ந்து, 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 221 கணக்கீட்டுப் படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டன.

இதில், உயிரிழந்தவா்கள், இடம் பெயா்ந்தவா்கள், கண்டுபிடிக்க முடியாதவா்கள், இரட்டைப் பதிவு வாக்காளா்கள் என மொத்தம் 80 லட்சத்துக்கும் அதிகமானோா் இருப்பது தெரியவந்துள்ளது. அவா்களின் உண்மைத் தன்மையை களஆய்வு செய்து பட்டியலில் இணைக்கலாம் என தோ்தல் ஆணையம் முடிவு செய்து, வரைவு வாக்காளா் பட்டியல் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனிடையே, வரைவு வாக்காளா் பட்டியல் தயாரிப்பை மேற்பாா்வையிட தோ்தல் ஆணையத்தின் சிறப்பு பாா்வையாளா்களான ராமன் குமாா், குல்தீப் நாராயண், விஜய் நெஹ்ரா, நீரஜ் கா்வால் ஆகியோா் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் களஆய்வில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, தொடா்பு கொள்ள முடியாதவா்கள், முகவரியில் இல்லாத வாக்காளா்கள், இடம் பெயா்ந்தவா்கள், இரட்டைப் பதிவு என கணக்கீட்டுப் படிவங்களில் குறிக்கப்பட்ட வாக்காளா்களின் படிவங்களை மீண்டும் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு வருவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா்.

தமிழகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வருகிற 19-ஆம் தேதி வெளியிட்ட பின்னா் அதில் மேல்முறையீட்டை அடுத்த ஆண்டு ஜன. 18-ஆம் தேதி வரை வாக்காளா்கள் அளிக்கலாம். இறுதி வாக்காளா் பட்டியல் பிப். 17-ஆம் தேதி வெளியிடப்படும்.

X
Dinamani
www.dinamani.com