

சென்னை: தன்னுடைய அரசியல் வாழ்வின், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டிச. 24-ல் எம்.ஜி.ஆர். நினைவு நாளில் அறிவிப்பதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் உயர் பதவிகளில் இருந்து, தமிழக முதல்வராகவும் பதவி வகித்தவர், தர்ம யுத்தம் நடத்தப்போவதாக அறிவித்ததன் மூலம் அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர் ஓ. பன்னீர்செல்வம்.
தற்போது அதிமுகவிலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தாலும், அது எந்தவொரு முன்னேற்றத்தையும் அடையாததால், கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில்தான், தன்னுடைய அரசியல் வாழ்வின், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டிச. 15-ல் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவிப்பதாக ஓ. பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.
ஆனால், நிர்வாகிகளுடன் டிச 15ல் நடத்தவிருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக இன்று பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும், டிச. 24ஆம் தேதி முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினத்தன்று, தனது அடுத்தகட்ட நகர்வு குறித்து அறிவிக்கவிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
முன்னதாக, அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்த போது, பிரிந்து சென்றவர்களை அதிமுகவில் இணைக்க டிச.15ஆம் தேதி வரை கெடு. அப்படி நடக்கவில்லை என்றால் புதிய அறிவிப்பு வெளியாகும் என அடுத்தகட்ட நகர்வு குறித்து அறிவிக்கப்போவதாகக் கூறிய ஓ. பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவை தொண்டர் உரிமை கழகமாகவும் மாற்றி அறிவித்தார்.
இதனால், அவர் புதிய கட்சியைத் தொடங்குவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில்தான், டிசம்பர் முதல் வாரத்தில் ஓபிஎஸ் திடீரென புது தில்லி சென்று அமித் ஷாவை சந்தித்துப் பேசிவிட்டு வந்தார். இதனால், அதிமுகவில் மீண்டும் இணைவதற்கான அழுத்தம் கொடுக்குமாறு அமித் ஷாவிடம் ஓபிஎஸ் கேட்டுக் கொண்டிருப்பார் என்றும் கூறப்பட்டது.
புது தில்லியில் இருந்து திரும்பிய ஓ. பன்னீர்செல்வம், புதிய கட்சி தொடங்குவீர்களா என்று கேட்டதற்கு, இல்லவே இல்லை என்று பதிலளித்திருந்தார். இதனால், அவர் அதிமுகவில் இணையவே விரும்புவதாகக் கூறப்பட்டது.
எனவே, அதிமுகவுக்கு பாஜக அழுத்தம் கொடுத்து விரைவில் ஓபிஎஸ் போன்ற அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த வார தொடக்கத்தில் அதிமுக பொதுக் குழுவில் கட்சித் தலைவர்கள் பலரும் துரோகிகள் என்று விமரிசித்து கடுமையான சொற்களால் பேசினர். பொதுக்குழுவில், பிரிந்து சென்றவர்களை சேர்ப்பது குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசப்படவில்லை. இதன் மூலம், ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு அதிமுகவில் இடமில்லை என்பது தெள்ளத்தெளிவாக வெளிச்சத்துக்கு வந்தது.
அதிமுகவுக்குள் ஓ. பன்னீர்செல்வத்தைக் கொண்டு வருவதால், என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை உத்தேசித்த எடப்பாடி பழனிசாமி, ஒருபோதும், இந்த முடிவுக்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது. இந்த விவகாரத்தில் பாஜக தரப்பிலிருந்தும், தனிப்பட்ட முறையில் அமித் ஷாவே கேட்டுக் கொண்டாலும், வலியுறுத்தியிருந்தாலும் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய முடிவில் மாற்றம் செய்யப்போவதில்லை என்பது தெரிகிறது.
நிச்சயமாக அதிமுகவில் இணைய சாத்தியம் இல்லை என்பது ஓ. பன்னீர்செல்வத்துக்கு கிட்டத்தட்ட தெரிந்துவிட்டிருக்கும் நிலையில்தான், அடுத்தக்கட்ட நகர்வு குறித்த அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. புதிய கட்சியா? புதிய கட்சியில் இணைப்பா? பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.