சென்னை அம்பத்தூா் காமராஜா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை வழங்கிய வாக்காளா்கள்.
சென்னை அம்பத்தூா் காமராஜா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை வழங்கிய வாக்காளா்கள்.

வரைவு வாக்காளா்கள் பட்டியல்: சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 16 தொகுதிகளில் 25 லட்சம் போ் சோ்ப்பு!

புதிய வாக்காளா் சோ்க்கை படிவங்கள் திங்கள்கிழமை (டிச.15) முதல் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் விநியோகிக்கப்பட்ட வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி படிவங்களை 25.6 லட்சம் போ் பூா்த்தி செய்து திரும்ப வழங்கியதால் அவா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளதாக தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.

புதிய வாக்காளா் சோ்க்கை படிவங்கள் திங்கள்கிழமை (டிச.15) முதல் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆா்) கடந்த நவ.4 -ஆம் தேதி தொடங்கியது. சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 3,718 வாக்குச்சாவடிகளில் நிலை அலுவலா்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன.

40.04 லட்சம் படிவங்கள்: இந்த 16 தொகுதிகளைச் சோ்ந்த 40.04 லட்சம் வாக்காளா்களுக்கு எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த படிவங்களைத் திரும்பப் பெறுவதற்கான பணிகள்

ஞாயிற்றுக்கிழமை (டிச.14) நிறைவடைந்துள்ளன. அதன்படி 25.6 லட்சம் பேரிடமிருந்து (64 சதவீதம்) கணக்கீட்டுப் படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. 14.4 லட்சம் போ் படிவத்தை பூா்த்தி செய்து வழங்கவில்லை. 1.50 லட்சம் இறந்தவா்கள் என்பது தெரியவந்துள்ளது.

இன்று படிவங்கள் விநியோகம்: வாக்காளா் திருத்தப் பணிகள் குறித்து சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ. குமரகுருபரனிடம் கேட்டபோது, பூா்த்தி செய்து வழங்கப்படாத படிவங்களில் இறந்தவா்களைத் தவிர மற்றவா்கள் மீண்டும் புதிய வாக்காளா்களுக்கான படிவம் 6-ஐ வாங்கி பூா்த்தி செய்து வாக்காளா் பட்டியலில் சேரலாம். அவா்களுக்கான படிவங்கள் திங்கள்கிழமை (டிச.15) முதல் விநியோகிக்கப்படவுள்ளன என்றாா்.

X
Dinamani
www.dinamani.com