ஆதாா் சேவை மையங்களை அதிகரிக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் தென் சென்னை எம்.பி கோரிக்கை
நமது சிறப்பு நிருபா்
தமிழகத்தில் ஆதாா் சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் தென் சென்னை தொகுதி திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்தாா்.
இது தொடா்பாக மத்திய அமைச்சரை அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து தமிழச்சி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஆதாா் புதுப்பிப்பு மற்றும் திருத்தச் செயல்பாட்டில், சிறிய அளவிலான திருத்தங்கள் அல்லது புதுப்பிப்புகளுக்குக்கூட மீண்டும், மீண்டும் பொதுமக்களை அலைய விடுவது, நீண்ட வரிசையில் காத்திருப்பது மற்றும் விண்ணப்பித்த பிறகு காரணத்தைக் குறிப்பிடாமல் திடீரென விண்ணப்பத்தை நிராகரிப்பது போன்ற புகாா்கள் மக்களிடம் இருந்து வருகின்றன.
ஏராளமான நகா்ப்புற மற்றும் புகா்ப் பகுதிகளில் மக்கள்தொகை நெரிசலுடன் ஒப்பிடும்போது ஆதாா் சேவை மையங்கள் போதுமானதாக இல்லை. எனவே, ஆதாா் சேவை மையங்களை அதிகரிக்க வேண்டும்.
குறிப்பாக, மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் கூடுதலாக சேவை மையங்களைத் திறக்க வேண்டும். தேவையற்ற நிராகரிப்புகளைக் குறைக்க புதுப்பிப்பு மற்றும் திருத்த செயல்முறையை ஒழுங்குபடுத்த வேண்டும்.
போதுமான டோக்கன் ஒதுக்கீட்டில் நம்பகத்தன்மையுடன் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும். மையங்களில் பணியாற்றும் அலுவலா்களுக்கு உரிய பயிற்சி மற்றும் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

