

கட்டுப்பாடு இல்லாமல் ஒரு கோடி இளைஞர்கள் திரண்டாலும் யாருக்கும் எந்தப் பலனும் கிடையாது; கட்டுப்பாடு இல்லாத கூட்டத்தை வைத்து யாராலும் எதையும் சாதிக்க முடியாது என்று திமுக இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாட்டுக்குத் தலைமை வகித்து அவர் பேசியதாவது:
உறுப்பினர் சேர்க்கைக்கு பல கட்சிகள் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில் வாக்குச்சாவடி அளவில் இளைஞரணியினரை நியமித்து, 91 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட நிர்வாகிகளைக் கொண்டு மண்டல மாநாடு நடத்தியது திமுகதான்.
இன்றைக்கு மாநாடு என்றால் லட்சக்கணக்கில் அல்ல, நூற்றுக்கணக்கில்கூட இளைஞர்களைத் திரட்டுவது சாதாரண விஷயம் அல்ல. திமுகவில்தான் இளைஞரணி நிர்வாகிகளை ஒரு மாநாடு போல இங்கு கூட்டியிருக்கிறோம். இது நம்முடைய எதிரிகள் போடுகின்ற தப்புக்கணக்கை சுக்கு நூறாக உடைக்கின்ற கொள்கைக் கூட்டம்.
பொதுவாக இளைஞர்கள் கூட்டம் என்றால் கட்டுப்படுத்த முடியாது; கட்டுப்பாடு இருக்காது என்ற ஒரு பிம்பம் தற்போது வந்துள்ளது. ஆனால் திமுக இளைஞரணியினர் அப்படி கிடையாது. மிகுந்த கட்டுப்பாடு உடையவர்கள் என்பதற்கு இங்கு கூடியுள்ள கூட்டம் சான்றாகும்.
கட்டுப்பாடு இல்லாமல் ஒரு லட்சமல்ல, ஒருகோடி இளைஞர்கள் திரண்டாலும் யாருக்கும் எந்தப் பலனும் கிடையாது.
கட்டுப்பாடு இல்லாத கூட்டத்தை வைத்து யாராலும் எதையும் சாதிக்க முடியாது. ஆனால், கட்டுப்பாடு இங்குள்ள கூட்டம் திமுகவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பலமாக இருக்கும் என்பதை உறுதியாக கூற முடியும்.
திமுகவினர், இளைஞரணியினர் களத்திலிருந்து என்றும் பின்வாங்கியது கிடையாது. ஆதிக்கத்துக்கு அடிபணிந்தது கிடையாது. சுயமரியாதையை விட்டுக் கொடுத்தது கிடையாது.
அப்படிப்பட்ட திமுகவை சிலர் இன்று மிரட்டிப் பார்க்கிறார்கள். பிகார் வெற்றி விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர்அமித் ஷா, பிகாரில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம், அடுத்த இலக்கு தமிழ்நாடுதான் என்று பேசியிருக்கிறார். நீங்கள் எவ்வளவு சீண்டினாலும், மிரட்டினாலும் அதை எதிர்கொள்வதற்கு கருப்புசிவப்பு இளைஞரணிப் படை களத்தில் என்றும் தயாராக இருக்கும்.
தமிழகத்தை காப்பாற்றும் போர்க்களத்தில் திமுக என்றைக்குமே முன்வரிசையில் இருந்திருக்கிறது. இந்த போர்க்களத்தில் எதிரிகள்தான் மாறி மாறி வந்திருக்கிறார்களே தவிர, திமுக அதே வலிமையுடன்தான் இருந்திருக்கிறது. முதல்வர் கூறுவது போல, தமிழ்நாடு என்றைக்குமே தில்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.
திமுக ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும், பதவியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் கிடையாது. இது தமிழ்நாட்டை, தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காகத் தொடங்கப்பட்ட இயக்கம். மிசா என்னும் நெருப்பாற்றில் நீந்தி வந்த இயக்கம். மொழிப்போரை நடத்தி வெற்றி பெற்ற இயக்கம். அடக்குமுறைகளை வீழ்த்திய இயக்கம்.
இப்படிப்பட்ட திமுகவைப் பார்த்து, குஜராத்திலிருந்து மிரட்டி பணிய வைக்க நினைத்தால் அது உங்கள் கனவில் கூட நடக்காது. திமுகவினர், இளைஞரணியினர் இருக்கும் வரை தமிழகத்தை அவர்களால் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.
தமிழகத்துக்கு என்று தனித்துவம் இருக்கிறது.பெரியார் என்னும் கொள்கை நெருப்பு தமிழகத்தை பாதுகாப்பு வளையமாக சுற்றிக் கொண்டு இருக்கிறது. அண்ணாவும், கருணாநிதியும் உணர்வாக இருந்துகொண்டு தமிழகத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். யானையை அடக்கும் அங்குசமாக தமிழக முதல்வர் இருந்து கொண்டிருக்கிறார்.
சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, தேர்தல் ஆணையம் என எல்லோருடனும் பாஜக கூட்டு சேர்ந்து தமிழகத்துக்குள்நுழைய பார்க்கிறது. இப்படிப்பட்ட பாஜகவை நம்பித்தான் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் களத்துக்கு வந்துள்ளார். ஆனால் நாம் மக்களுடன் தொடர்ந்து இருக்கிறோம். மக்களும் நம்முடன் இருக்கிறார்கள்.
இன்றைக்கு என்ஜின் இல்லாத கார்தான் அதிமுக. பாஜக என்ற லாரி, என்ஜின் இல்லாத காரை எப்படியாவது கட்டியிழுத்துக் கொண்டு போகப் பார்க்கிறது. எடப்பாடி பழனிசாமி முதலில் காப்பாற்ற வேண்டியது அதிமுகவைத் தான். ஏனெனில், கட்சியிலிருந்து பலர் வெளியே சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் தான்தான் நிரந்தர பொதுச் செயலர் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி சமூகநீதியை, சமத்துவத்தை, பெண்ணுரிமையைப் பாதுகாக்கும் ஆட்சி. இந்த ஆட்சியை மீண்டும் கொண்டுவருவது நமது பொறுப்பு.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் பெறப்போகும் வெற்றி மிகப்பெரிய வெற்றியாக இருக்க வேண்டும் என்றார் உதயநிதி ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.