பாஜகவால் வெல்ல முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

பாஜகவால் வெல்ல முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
பாஜகவால் வெல்ல முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
Updated on
2 min read

பாஜகவால் வெல்ல முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருவண்ணாமலை மலம்பாம்பாடி பகுதியிலுள்ள கலைஞர் திடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாட்டில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

மாநாட்டில் திமுகவுக்கு புது ரத்தமாக வந்திருக்கிற உங்களைப் பார்க்கும்போது புது மகிழ்ச்சியும், நம்பிக்கையும் பிறக்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி சிந்தித்து உருவாக்கியதுதான் திமுக இளைஞரணி. 1980, ஜூலை 25}ஆம் தேதி மதுரை ஜான்சிராணி பூங்காவில் இளைஞரணியைத் தொடங்கினோம். திமுகவின் அத்தனை நடவடிக்கைகளுக்கும் துணை நின்றது இளைஞரணிதான்.

அந்தப் பொறுப்பை தற்போது உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைத்திருக்கிறோம். கொள்கை எதிரிகள் உதயநிதியை "மிகவும் ஆபத்தானவர்' என்று புலம்புகிறார்கள். அந்த அளவுக்கு கொள்கையில் உறுதியாக இருக்கிறார். கழகத்துக்கு எது தேவை என்பதை உணர்ந்து செயல்படுகிறார்.

ஆக்ரோஷத்துடன் பிற்போக்கு சக்திகள்: மத்தியில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைந்த பிறகு, வலதுசாரி, பிற்போக்கு சக்திகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆக்ரோஷத்துடன் செயல்படத் தொடங்கியிருக்கின்றன.

வெளுத்தது எல்லாம் பால் என்று நம்புகிற மக்களிடம் பொய்களை, அவதூறுகளை, பிற்போக்கு எண்ணங்களை தேன் தடவிய வார்த்தைகளால் சேர்க்கப் பார்க்கின்றன. பிற்போக்கு கருத்துகள் வேகமாகப் பரவும்; அதைத் தடுக்க நாம் நமது கொள்கைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும். பொய் பேசுவதற்கு ஒருவர் தயங்காதபோது, உண்மை பேசுவதற்கு நாம் ஏன் தயங்க வேண்டும்?

ஆணவத்துக்கு அடிபணிய மாட்டோம்: தமிழ்நாடு, தமிழ்மொழியைக் காக்கும் கடமையோடு, நாட்டையும், பண்பாட்டையும் காக்கும் கடமையும் நமக்கு இருக்கிறது. இந்தியாவிலேயே பாஜகக்கு எதிராக கருத்து ரீதியாக மோதிக் கொண்டிருக்கும் இயக்கம் திமுக மட்டும்தான். அதனால்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றோருக்கு நம் மீது எரிச்சல் வருகிறது.

"பிகாரில் ஜெயித்துவிட்டோம். எங்களின் அடுத்த இலக்கு தமிழகம்தான்' என்று கூறுகிறார். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இது தமிழ்நாடு. பாஜகவால் வெல்ல முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு.

அன்போடு வந்தால் அரவணைப்போம். ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம். எதிர்த்து நிற்போம். உங்களை ஜெயித்து காண்பிப்போம்.

சாதனைகளைக் கொண்டு சேருங்கள்: திமுக இளைஞரணியினர் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். மக்களிடம் செல்லுங்கள்; அவர்களுடன் பழகுங்கள்; அவர்களுக்காக குரல் கொடுங்கள்.

அரசியல் உணர்வுகளை, கொள்கைகளை, நாடே திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகளைக் கொண்டு செல்லுங்கள். உலகில் எந்த ஆட்சியும் செய்யாத முத்திரைத் திட்டங்களை நாம் நிறைவேற்றியிருக்கிறோம். ஒவ்வொரு வாக்கும் நமக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் கிடைக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் எதிர்காலம்: தேர்தல் நெருங்கி வந்துவிட்டது. 10 ஆண்டுகள் தமிழ்நாட்டை படுபாதாளத்தில் தள்ளிய அதிமுக ஆட்சியில் அவர்கள் செய்த தவறுகளை, குற்றங்களை, துரோகங்களை மக்களிடம் நினைவுபடுத்துங்கள். அவர்கள் திரும்பி வந்தால் தமிழ்நாடு என்ன ஆகும், என்னென்ன விளைவுகளைச் சந்திக்கும் என்று மக்களிடம் கூறுங்கள்.

தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் பாஜகவினர் தங்கள் பொய் பரப்புரையைப் பரப்புவார்கள். பதற்றத்தை உண்டாக்கும் அரசியலை முன்வைத்து தேர்தலைச் சந்திக்க வருவார்கள். அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

2026 பேரவைத் தேர்தலில் மக்கள் முன் உள்ள கேள்வி என்னவென்றால், இன்னும் 50 ஆண்டுகள் முன்னோக்கி நடைபோடப் போகிறோமா? இல்லை, 50 ஆண்டுகள் பின்னோக்கி இழுக்க முயற்சி செய்கிறவர்களுக்கு அடிபணியப் போகிறோமா? என்பதுதான். அந்தக் கேள்விக்கு மக்கள் அளிக்கப்போகும் விடைதான் திராவிட மாடல் ஆட்சி 2.0. அதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

திமுகவின் எதிர்காலத்தில்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. அந்த எதிர்காலம் வளம் நிறைந்ததாக, ஒளி நிறைந்ததாக தமிழ்நாடு சிங்க நடை போடும் வகையில் அமைய வேண்டும். அதற்கு நீங்கள்தான் அடித்தளமாக இருக்க வேண்டும். நமது பணி திராவிட மாடல் ஆட்சி 2.0. அந்த வெற்றிக்கான பயணத்தை இன்றே தொடங்குங்கள் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மாநாட்டுக்கு திமுக இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார்.

பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார்.

மாநாட்டில் திமுக பொதுச் செயலர் துரைமுருகன், முதன்மைச் செயலர் கே.என்.நேரு, துணை பொதுச் செயலர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன், சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பேரவை உறுப்பினர்கள், மாவட்டச் செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com