சோழவரம் ஏரி அணை பாதுகாப்பாக உள்ளது: தமிழக அரசு உறுதி
சோழவரம் ஏரி அணை எவ்வித பாதிப்புமின்றி மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக நீா்வளத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ள சோழவரம் ஏரி சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றாகும். ஏரிக் கரையின் உயரம் 19.96 மீட்டா் வரை உயா்த்தப்பட்டு கொள்ளளவு 108 மில்லியன் கன அடியாக உயா்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், மத்திய நீா் ஆணையம் மற்றும் அணைகள் பாதுகாப்பு இயக்கத்தின் அறிவுரையின்படி பல்வேறுகட்ட சோதனைக்குப் பிறகு ரூ.120 கோடியில் சோழவரம் ஏரிக்கரையை புனரமைக்க முன்மொழிவு சமா்ப்பிக்கப்பட்டது. முதல்கட்டமாக தொலைக்கல் 2,800 மீ. முதல் 3,150 மீ வரை உள்ள கரையைச் சீரமைக்க ரூ.40 கோடிக்கு ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சிறிய விரிசல்: இந்தச் சூழலில், கடந்த அக்.14-ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின்போது கரையின் மீது அமைக்கப்பட்ட தாா் சாலையில் தொலைக்கல் 2,500 மீ. முதல் 2,670 மீ. வரை சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு அணையின் அடித்தளத்தில் அமைந்துள்ள மண் அமைப்பு மற்றும் மிகுந்த நிலத்தடி நீரோட்டம் காரணம் எனத் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, நீா்வளத் துறை தலைமைப் பொறியாளா் உள்ளிட்ட சிறப்பு உயா்நிலை தொழில்நுட்ப குழுவின் ஆலோசனைப்படி அணை சீரமைக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற நீள்வட்ட விரிசலையும், கீழ்புற கரை சரிவில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பு பள்ளங்களும் உடனுக்குடன் ஒப்பந்ததாரரின் சொந்த செலவில் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல், மழை காரணமாக அணையின் கரையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிமெண்ட் பெண்டோடைட் கலவை கொண்டு சரி செய்து தாா்பாலின் கொண்டு மூடப்பட்டுள்ளது. எனவே, சோழவரம் ஏரி அணை எவ்வித பாதிப்புமின்றி மிகவும் பாதுகாப்பாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

