

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவா் கைது செய்யப்பட்டார். பின்னர், அவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, ஞானசேகரனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஞானசேகரனின் தாய், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முன்னதாக, ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் அடிப்படையில்தான், ஞானசேகரன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அந்த வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை நீட்டிக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினர்.
அப்போது காவல் துறை தரப்பில், ஞானசேகரன் மீது மற்ற குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அவர் செய்த குற்றச் செயல்களால் பொது அமைதிக்குப் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் விரிவாக வாதிட இருப்பதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கு இன்று(டிச. 15) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் ஞானசேகரன் மீதான குண்டர் சட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரைக் குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு: மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.