

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகத் தயார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே.மணி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
பாமக இருதரப்பாக பிரிந்திருக்கும் நிலையில், ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த மூத்த தலைவர் ஜி.கே. மணி குறித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து ஜி.கே. மணி பேசியதாவது:
“என் தந்தையுடன் இருப்பவர்கள் அவரின் மனதை மாற்றி துரோகம் செய்கிறார்கள் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். ஜி.கே. மணிதான் என்னையும் என் தந்தையையும் பிரித்தார் என்று அன்புமணி தெரிவித்திருப்பது வேதனை அளிக்கிறது.
அன்புமணிக்கு எந்த வகையிலும் கெடுதலும், துரோகம் செய்ததில்லை. அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி பெற்றுக் கொடுங்கள் என்று நான்தான் ராமதாஸிடம் பேசினேன். அப்போது அன்புமணி சொன்ன வார்த்தை, என் அப்பாவுக்கு அடுத்த நிலையில், உங்களைதான் நினைக்கிறேன் என்றார்.
ராமதாஸும் அன்புமணியும் சேர்ந்து பேசினால்தான் பிரச்னைக்கு தீர்வுகாண முடியும். பாமக தேர்தலில் பலமான கட்சியாக இருக்க வேண்டுமென்றால் இருவரும் இணைய வேண்டும்.
துரோகிகள் இருக்கும் வரை ராமதாஸுடன் இணைய மாட்டேன் என்று அன்புமணி கூறினால், யாரெல்லாம் துரோகிகள் எனக் கூறுங்கள் நாங்கள் வெளியேறிவிடுகிறோம். ராமதாஸும் அன்புமணியும் ஒன்று சேருவதற்கு நானும் எனது குடும்பத்தினரும் வெளியேறத் தயார். எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்யத் தயார். வேறு கட்சியில் சேர மாட்டேன். எனக்கு பாமகவின் எதிர்காலமே முக்கியம்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.