

திருப்பரங்குன்றத்தில் இருப்பது சமண துறவிகள் வெளிச்சத்துக்காக வைக்கப்பட்ட தூண் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கோவில் நிர்வாகம் வாதத்தை முன்வைத்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கோவில் தரப்பில் வாதத்தை முன்வைத்த வழக்கறிஞர்கள் தெரிவித்ததாவது:
“தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோவில் நிர்வாகத்துக்கே முழு உரிமை உள்ளது. கோவில் நிர்வாகத்துக்கு என்று சட்டவிதிகள் உள்ளன. தனிநபர் உரிமையை நிறைவேற்ற முடியாது.
திருப்பரங்குன்றத்தில் 100 ஆண்டுகளாக ஆகம விதிகளின்படி தீபம் ஏற்றப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் கோவிலைக் கட்டாயப்படுத்த முடியாது.
கோயிலின் பழக்கவழக்கங்களை மாற்ற தனிநபர் கோரியுள்ளார், அதற்கான உரிமை அவருக்கு இல்லை. மலை மீது விளக்கேற்றுவது வேறு, வீட்டில் விளக்கேற்றுவது வேறு. மனுதாரர் கார்த்திகை தீபத்தை வீட்டு தீபம்போல் நினைக்கிறார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சமண துறவிகள் இரவு நேரங்களில் ஆலோசனை செய்யும் போது, அப்பகுதியில் தூண் வைத்து வெளிச்சத்துக்காக விளக்கேற்றியுள்ளனர். கார்த்திகை தீபத்துக்காக அமைக்கப்பட்ட தூண் கிடையாது.
இதுபோன்று மதுரையில் 4 இடங்களில் சமண துறவிகள் அமைத்த தூண்கள் இருக்கின்றன. இது ஹிந்துக்களுக்கு சொந்தமான தூண் கிடையாது.
இந்த வழக்கை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவசரமாக கையாண்டார். திடீர் உத்தரவால் அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்டனர்.” என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.