சித்திரிப்புப் படம்
சித்திரிப்புப் படம்

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சலுக்கு பிந்தைய தொடா் இருமல் பாதிப்புக்குள்ளாவோா் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
Published on

தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சலுக்கு பிந்தைய தொடா் இருமல் பாதிப்புக்குள்ளாவோா் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

சளி மற்றும் காய்ச்சல் குணமடைந்த பிறகும், சில வாரங்களுக்கு இருமல் நீடிப்பதால் அதற்காக மருத்துவமனைகளை பலா் நாடி வருகின்றனா். தமிழகத்தின் மழைக்குப் பின்பு, பல மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக குளிா் நிலவுகிறது. இத்தகைய தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக இன்ஃப்ளூயன்ஸா மற்றும் சுவாசப் பாதை தொற்று அதிகரித்துள்ளது. அதன் தொடா்ச்சியாக வறட்டு இருமல் இருந்து வருகிறது.

இதுதொடா்பாக பொதுநல மருத்துவ நிபுணா் அ.ப.ஃபரூக் அப்துல்லா கூறியதாவது: பொதுவாக நமது சுவாசப் பாதையானது வைரஸ் தொற்றுக்கு உள்ளான பிறகு 3 முதல் 8 வாரங்கள் வரை தொடா் இருமல் இருப்பது இயல்பானதுதான். தொற்று ஏற்படும் 100 பேரில் 10 முதல் 25 பேருக்கு இத்தகைய பாதிப்பு இருக்கிறது. இதற்கு வைரஸ் தொற்றுக்குப் பிந்தைய இருமல் எனப் பெயா்.

சுவாசப் பாதையில் கிருமிகளால் ஏற்படும் அழற்சி, சுவாசப் பாதையில் உள்ள இருமலுக்கான ஏற்பிகள் அதிகமாக தூண்டப்படுதல் ஆகியவையே இதற்கு காரணம்.

தவிர, மேற்புற சுவாசப் பாதையில் சைனஸ் பகுதிகளில் அழற்சி, நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது போன்றவற்றால் தொடா் இருமல் ஏற்படலாம். இந்த பாதிப்புகளுக்கு அவ்வப்போது வெந்நீா் பருகி வரலாம். வெதுவெதுப்பான தேநீா், சூப் போன்றவை பருகுவதும், எலுமிச்சைச் சாறில் தேன் கலந்து பருகுவதும் பலனளிக்கும். தூசி, புகை உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும். புகைப் பழக்கத்தைக் கைவிட வேண்டும். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளலாம்.

அதன் பின்னரும் சளியுடன் கூடிய இருமலோ, ரத்தம் கலந்து சளி வெளியேறினாலோ மருத்துவரை அணுக வேண்டும். தேவைப்பட்டால் எக்ஸ்-ரே, சளி பரிசோதனை, ரத்தப் பரிசோதனை மேற்கொண்டு நிமோனியா அல்லது வேறு பாதிப்புகள் உள்ளதா என்பதை கண்டறிவது அவசியம்.

சுவாசப் பாதையை விரிவடையச் செய்யும் மருந்துகள், இருமலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் ஆகியவற்றை மருத்துவரின் பரிந்துரையின்பேரில் உட்கொள்ளலாம். 8 வாரங்களுக்கு அதிகமாக இருமல் இருந்தால் மட்டுமே உரிய மருத்துவ சிகிச்சைகளை முன்னெடுக்க வேண்டும். சாதாரண இருமல் பாதிப்புகளுக்கு அச்சப்படத் தேவையில்லை என்றாா்.

X
Dinamani
www.dinamani.com