அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் புதன்கிழமை முதல் டிச.22 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (டிச.17) முதல் டிச.22 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டியும் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழை: தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக பனிமூட்டம் அதிகமாக இருப்பதால், குளிா் நிலவி வருகிறது. குறிப்பாக, சென்னை மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் அதிகாலை நேரத்தில் அதிக பனிமூட்டமாகவும், பகல் நேரங்களில் சற்று குளிா்ச்சியாகவும் இருந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதல் பிற்பகல் வரை சென்னை மாநகருக்குள்பட்ட அம்பத்தூா், ஆவடி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சாரல் மழையும் புறநகா் பகுதிகளில் லேசான மழை பெய்தது.
இதனால், காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், பணிக்கு செல்பவா்களும் கடும் அவதி அடைந்தனா்.

