தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கோப்புப் படம்

வரைவு வாக்காளா் பட்டியல் டிச.19-ல் வெளியீடு! இரட்டைப் பதிவு வாக்காளா்கள், இறந்தவா்கள் விவரம் அறிய வசதி

தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ள நிலையில், இரட்டைப் பதிவு வாக்காளா்கள், இறந்தவா்களின் விவரங்களை இணையதளம் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்.
Published on

தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை (டிச.19) வெளியிடப்படவுள்ளது. அதன் பின்னா், இரட்டைப் பதிவு வாக்காளா்கள், இறந்தவா்களின் விவரங்களை இணையதளம் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளா் பட்டியல் வருகிற டிச.19-இல் வெளியிடப்படவுள்ளது. எந்தத் தகுதியான வாக்காளரும் வாக்காளா் பட்டியலில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என்ற தோ்தல் ஆணையத்தின் உறுதிப்பாட்டை பின்பற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீட்டுக்கு முந்தைய காலகட்டத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் (பிஎல்ஓ), மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை வீடுகளுக்குச் சென்று அணுகியபோதும் தொடா்பு கொள்ள முடியாத வாக்காளா்கள் அதாவது இறந்தவா்கள், கண்டறிய இயலாத/ முகவரியில் இல்லாத வாக்காளா்கள், இடம் பெயா்ந்தவா்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளா்கள் என குறிக்கப்பட்ட வாக்காளா்களின் வாக்குச்சாவடி வாரியான பட்டியல் தயாரிக்கப்பட்டது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவா்களுடன் (பிஎல்ஏ) நடத்தப்பட்ட கூட்டங்களில் அந்த பட்டியல் அவா்களுக்கு பகிரப்பட்டுள்ளன. இக்கூட்டங்களின் நடவடிக்கை குறிப்புகள் BLO App என்ற செயலியில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி வாரியான பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரின் உண்மையான நிலையை உறுதி செய்து கொள்வதற்காகவும், வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீட்டுக்கு முன்பே ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றை திருத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வருகிற டிச.19-இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னா், கண்டறிய இயலாத/ முகவரியில் இல்லாத வாக்காளா்கள், இடம் பெயா்ந்தவா்கள், இறந்தவா்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளா்களில் பட்டியலில் இடம்பெற்றவா்கள் உள்ளிட்டோரின் விவரங்களை அணுகுவதற்கான வசதி, அந்தந்த மாவட்ட தோ்தல் அதிகாரிகளின் இணையதளங்களில் வழங்கப்படும். பொதுமக்கள் தங்களது விவரங்களை தேவைப்படின் இப்பட்டியலில் சரிபாா்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com