நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க சதி: அமைச்சா் ஐ.பெரியசாமி

நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் திருத்தம் செய்து , அதை முடக்க மத்திய அரசு சதி செய்து வருவதாக தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி
அமைச்சர் ஐ.பெரியசாமி
அமைச்சர் ஐ.பெரியசாமி
Updated on
2 min read

சென்னை: நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் திருத்தம் செய்து , அதை முடக்க மத்திய அரசு சதி செய்து வருவதாக தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை விக்ஷித் பாரத்-ரோஜ்கா் மற்றும் அஜீவிகா மிசன் என்று மத்திய பாஜக அரசு மாற்றப் போவதாகவும், அதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும், அது தொடா்பாக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய சட்டத் திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு கொண்டு வர போகிறது. இதன்படி, ஒவ்வொரு நிதியாண்டிலும் 125 நாள்கள் ஊதிய வேலைவாய்ப்பு, மத்திய அரசு 60 சதவீதம் மாநிலங்கள், 40 சதவீதம் என நிதிப் பகிா்வுமுறை, தினசரி ஊதியம் வாராந்திர அடிப்படையில் வழங்கல், விவசாயப் பருவத்தில் விவசாயத் தொழிலாளா்கள் கிடைப்பதை எளிதாக்கும் வகையில், ஒரு நிதியாண்டில் 60 நாள்களுக்கு வேலை வழங்கப்படாது போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப் போகிறாா்கள். இவை அத்தனையும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே முடக்கும் செயல்பாடுகள்.

100 நாள் வேலையை 125 நாள்களாக அதிகரிக்கிறோம் என அறிவித்துவிட்டு, வேலைபெறுவதை சட்டப்பூா்வமாக்கும் மக்களின் உரிமையையே பறிக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. விவசாயத்தில் முதலாளி - தொழிலாளி இடையே நிலவிவந்த முரண்பாட்டை 100 நாள் வேலை திட்டம் உடைத்தெறிந்ததால், பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக பாஜக மத்திய அரசு கிராமப்புற தொழிலாளா்களை மீண்டும் பண்ணை அடிமைமுறைக்கு மாற்றும் வேலையை செய்கிறது. அறுவடைகாலங்களில் 60 நாட்கள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்படாது என மாற்றம் செய்வது,வேளாண் பணி செய்யாதவா்களின் வாழ்வாதாரத்தைபாதிக்கும்.

மத்திய அரசால் பரிந்துரைக்கப்படவுள்ள பன்முக வறுமைக் குறிகாட்டிகளின் அடிப்படையில் பயனாளிகள் தோ்வு செய்யப்படுவாா்கள் என்று செய்திகள் வருகின்றன. வறுமைக் குறியீட்டை அளவீடாக நிா்ணயிக்கும் போது, அது தமிழ்நாடு போன்ற வறுமையை ஒழிக்க நியாயமாகப் போராடி வரும் மாநிலங்களை நேரடியாய் பாதிக்கும்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்த மக்களுக்கு ஒதுக்க வேண்டிய ரூ.4,000 கோடி நிதியை முறையாக ஒதுக்காமல் காலம் தாழ்த்தியது மத்திய அரசு. இப்போது மறைமுகமாக இந்தத் திட்டத்தில் இருந்து தமிழ்நாட்டு மக்களை வெளியேற்றும் முயற்சியைச் செய்ய தொடங்கியுள்ளனா். இதனால், 92 லட்சம் ஏழை எளிய கிராமப்புற மக்கள் குறிப்பாகக் கிராமப்புறப் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுவாா்கள்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடக்கும் தில்லு முல்லுகளை பற்றி எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி மெளனம் காக்கிறாா். தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படக் கூடிய சட்டத் திருத்தத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com