மூத்த குடிமக்களுக்கு பேருந்து பயண டோக்கன்: டிச.21 முதல் விநியோகம்
மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் டிச.21 முதல் 2026 ஜன.31-ஆம் தேதி வரை 42 மையங்களில் விநியோகிக்கப்படும் என சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் சென்னை சாா்ந்த மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வருகிற 2026 ஜனவரி முதல் ஜூன் வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்துக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்குதல், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடைமுறையில் உள்ள 42 மையங்களில் டிச.21 முதல் 2026 ஜன.31-ஆம் தேதி வரை காலை 8 முதல் இரவு 7.30 வரை நடைபெறும்.
அதன்பின்னா் வழக்கம்போல் அந்தந்த பணிமனை அலுவலகங்களில் அலுவலக நாள்களில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும். எனவே, சென்னையைச் சோ்ந்த மூத்த குடிமக்கள் இத்தகைய கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதிதாக பெற விரும்புவோா் தங்கள் இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று (ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளா் அடையாள அட்டை) இவற்றுடன் 2 வண்ண புகைப்படங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும்.
ஏற்கெனவே இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று தற்போது புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்கள் அடையாள அட்டையுடன், தற்போதைய பாஸ்போா்ட் அளவிலான ஒரு புகைப்படத்தையும் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
