டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல்! பெயர் இல்லாவிட்டால் என்ன செய்வது?

டிச.19ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும் நிலையில், அதில் பெயர் இல்லாவிட்டால் என்ன செய்வது என்பது பற்றி..
voter list - file photo
வாக்காளர் பட்டியல் - பிரதி படம்கோப்புப்படம்.
Updated on
2 min read

தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் டிச. 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ள நிலையில், சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது, பிஎல்ஓக்கள் அளித்த படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுத்தவர்கள், தங்களது பெயர்கள் சரியாக இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

மேற்குவங்கம், ராஜஸ்தான், கோவா மாநிலங்களில் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியான நிலையில், அதில் சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில்தான், தமிழ்நாட்டில் நாளை மறுநாள் வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்.

தகுதிவாய்ந்த வாக்காளர்கள் விடுபட மாட்டார்கள் என்று தேர்தல் ஆணையம் உறுதியளித்திருந்தாலும், உயிரிழந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள், இரட்டைப் பதிவு வாக்காளர்கள் என மொத்தம் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மக்களின் அச்சம் என்ன?

பெரும்பாலானோர் பூர்த்தி செய்து கொடுத்த படிவத்தில், முந்தைய வாக்காளர் விவரங்களை அளிக்க முடியவில்லை. காரணம், செல்போனில் தேர்தல் ஆணையத்தின் செயலி வைத்திருந்தாலும், ஒருவர் முன்பு இருந்த ஊர் அல்லது பகுதி முன்பு எந்தத் தொகுதியில் இருந்தது என்பதையே உறுதி செய்ய முடியாத நிலையில், பாமர மக்கள், அதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்காதவர்கள் எவ்வாறு அந்த விவரங்களை பூர்த்தி செய்து கொடுத்திருக்க முடியும்.

எனவே, வரைவு வாக்காளர் பட்டியலை அனைவருமே சரிபார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

தற்போதைய நிலை என்ன?

தொடர்பு கொள்ள முடியாத வாக்காளா்கள், இறந்தவா்கள், கண்டறிய இயலாத/ முகவரியில் இல்லாத வாக்காளா்கள், இடம் பெயா்ந்தவா்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளா்கள் என குறிக்கப்பட்ட வாக்காளா்களின் வாக்குச்சாவடி வாரியான பட்டியல் தயாரிக்கப்பட்டு அது பிஎஎல்ஓ ஆப் (BLO App) என்ற செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ளவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது என்றே கூறப்படுகிறது.

இதனுடன், தவறுதலாக, படிவத்தில் பிழையாக எழுதிக் கொடுத்ததால், வரைவு வாக்காளர் பட்டியலில், ஒருவரது பெயர் விடுபட்டிருந்தால் என்ன செய்வது என்பதால் அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

ஏன் பெயர் விடுபட்டது என்பதை அறிய முடியுமா?

அதிகாரிகள் கூறுகையில், வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னா், கண்டறிய இயலாத/ முகவரியில் இல்லாத வாக்காளா்கள், இடம் பெயா்ந்தவா்கள், இறந்தவா்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளா்களில் பட்டியலில் இடம்பெற்றவா்கள் உள்ளிட்டோரின் விவரங்களை அறிந்துகொள்ளும் வசதி, அந்தந்த மாவட்ட தோ்தல் அதிகாரிகளின் இணையதளங்களில் வழங்கப்படும். பொதுமக்கள் தங்களது விவரங்களை தேவைப்படின் இப்பட்டியலில் சரிபாா்த்துக் கொள்ளலாம் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒருவரது பெயர் ஏன் நீக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை இந்த இணையதளம் வாயிலாக அறியலாம்.

இதில் ஏதேனும் ஆட்சேபனைகளோ, பெயர்கள் விடுபட்டிருந்தாலோ, டிசம்பர் 19 முதல் 2026ஆம் ஆண்டு ஜன. 18ஆம் தேதி வரை உரிமை கோரல்கள், மறுப்புரைகள் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறகு, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர் புதிதாக சேர்க்க வேண்டிய வாக்காளர் படிவம் 6 மூலம் விவரங்களைப் பதிவு செய்து வழங்க வேண்டும். அந்த படிவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி, தகுதியுடைய வாக்காளர்கள் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படுவார்கள்.

பிப்ரவரி மாதம் வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

As the draft voter list is released on Dec. 19, what to do if your name is not on it?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com