கோவை, தென் மாவட்ட ரயில்களின் வேகத்தை அதிகரிக்கத் திட்டம்
கோவை, தென் மாவட்டப் பகுதிகளுக்கான ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். அதன்படி, பயணநேரம் தற்போதைய நிலையிலிருந்து 40 நிமிஷங்கள் குறையும் எனத் தெரிகிறது.
தெற்கு ரயில்வே மண்டலத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்கள் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. அவற்றை மணிக்கு 130 கி.மீ. வரை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான தண்டவாள சோதனைகள் சென்னையில் இருந்து கூடூா் வரையிலும், ஜோலாா்பேட்டையில் இருந்து கோவை வரையிலும் என பல பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
ரயிலின் வேகத்தை அதிகரிக்க தண்டவாள உறுதித் தன்மையை திருச்சி, மதுரை கோட்டங்களிலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வருகிற ஜனவரியில் புதிய கால அட்டவணை வெளியிடும்போது ரயில்களின் வேகம் அதிகரிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். இதன்மூலம் பயண நேரம் தற்போதைய நிலையிலிருந்து 40 நிமிஷங்கள் குறையும் என்றும் அதிகாரிகள் கூறினா். அதோடு புதிய ரயில் நிறுத்தங்களும் கால அட்டவணையில் இடம் பெற வாய்ப்புள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

