உற்பத்தித் துறை, மின்னணு பொருள் ஏற்றுமதியில் அதிரடி காட்டியிருக்கும் அரசு: அமைச்சர் தங்கம் தென்னரசு

உற்பத்தித் துறை, மின்னணு பொருள்கள் ஏற்றுமதியில் முன்னேற்றம் அடைந்திருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.
தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு
Updated on
3 min read

தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துள்ள நிலையில், உற்பத்தித் துறை, சேவைத் துறை, மின்னணு பொருள்கள் ஏற்றுமதியில் தமிழக அரசு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

நம்முடைய ஜிஎஸ்டிபி, மாநில ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு, தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டு 24 - 25 -ஆம் நிதியாண்டில் இன்றைக்கு ரூ.31.19 லட்சம் கோடிகளாக உயர்ந்து 16% வளர்ச்சியை நாம் இன்றைக்கு அடைந்திருக்கிறோம்

முதலீட்டாளர்களுடனான சந்திப்பின் மூலமாக 11 லட்சத்து 40,731 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டு 1016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 34 லட்சத்து 8522 இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை நாம் கொண்டு வந்திருக்கிறோம் என்றார் தங்கம் தென்னரசு.

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய தொலைநோக்கு சிந்தனைகளால் அவருடைய தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியினுடைய புதிய தொழில் கொள்கைகளால் வரக்கூடிய 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நாம் எட்டுவோம் என்கின்ற மாபெரும் இலக்குடன் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

முதலமைச்சரின் முன்னெடுப்புகளால் தமிழ்நாட்டினுடைய பொருளாதாரம் வளர்ச்சி இன்றைக்கு ஒரு மிகக் குறிப்பிடத்தக்க சிறப்பான ஒரு உச்சத்தை தொட்டிருக்கிறது.

எனவே நம்முடைய ஜிஎஸ்டிபி - மாநில ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு இன்று உயர்ந்துள்ளது. 2023 - 24 ஆண்டுகளில் ரூ.26.88 லட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டு அதாவது 24 - 25 ஆம் நிதியாண்டில் 31.19 லட்சம் கோடிகளாக இருந்தது, அது உயர்ந்து 16% வளர்ச்சியை நாம் இன்றைக்கு அடைந்திருக்கிறோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்.

நம்முடைய ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவுடைய தரவுகளின் வாயிலாக கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த வளர்ச்சி விகிதம் நம்முடைய முதலமைச்சருடைய தலைமையிலான தமிழ்நாடு அரசினுடைய நிதி நிர்வாக மேம்பாட்டிற்கும், தமிழ்நாடு அரசினுடைய சிறப்பான நடவடிக்கைக்கும் கிடைத்திருக்கக்கூடிய மாபெரும் வெற்றியாகும்.

இத்தகைய உயர் வளர்ச்சி விகிதம் என்பது கடந்த மூன்று ஆண்டுகளாகவே தொடர்ந்து இருக்கிறது. 2021 - 22 ஆம் ஆண்டிலே நாம் பொறுப்பெற்ற காலத்திலே 15 .91% ஆகவும், அதேபோல 22 - 23 ஆம் ஆண்டுகளிலே 14.47% ஆகவும் அதைபோல 23- 24ஆம் ஆண்டுகளிலே 13.34% ஆகவும் தொடர்ச்சியாக நம்முடைய முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு இந்த வளர்ச்சி விகிதம் ஏற்பட்டு இன்றைக்கு அது 16 சதவீதத்தைத் தொட்டிருக்கிறது

மிகப்பெரிய ஒரு வளர்ச்சியும் திராவிட மாடல் ஆட்சியினுடைய வெற்றிக்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டாக இன்றைக்கு இது விளங்கி இருக்கிறது.

அதிலும் குறிப்பாக இந்த வளர்ச்சியிலே உற்பத்தித் துறை மிகப்பெரிய ஒரு பங்களிப்பினை செய்திருக்கிறது. இந்த நான்கு ஆண்டுகளிலே நீங்கள் பார்த்தீர்கள் என்று சொன்னால் தமிழ்நாட்டினுடைய இந்த பொருளாதாரம் ஜிஎஸ்டிபினுடைய வளர்ச்சி என்பது இந்த உற்பத்தி துறையை பொறுத்தமட்டிலே 1.46 லட்சம் கோடியாக இருந்தது. இரண்டு மடங்காக இன்றைக்கு அது பெருகி இருக்கிறது.

அதேபோல மகாராஷ்டிராவை நீங்கள் ஒப்பிட்டால், அது ஒரு வளர்ச்சி அடைந்த உற்பத்திதுறை மாநிலமாக இருக்கக்கூடியது. அது 0.71 லட்சம் கோடியாக இருக்கக்கூடிய இந்த மகாராஷ்டிரத்தை விட தமிழ்நாடு உற்பத்தி துறையிலே மிகப்பெரிய ஒரு முன்னேற்றத்தை இன்றைக்கு கண்டிருக்கிறது என்பதை நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.

அதற்கு காரணம் தமிழ்நாட்டிலே இன்றைக்கு பார்ப்பீர்கள் என்று சொன்னால் ஏறத்தாழ 40,000 மேற்பட்டிருக்கக்கூடிய தொழிற்சாலைகள் இருக்கிறது. அவற்றிலே ஏறத்தாழ 27.7 லட்சம் பேர் அங்கே வேலை வாய்ப்பு இருக்கக் கூடிய நிலைமைகள் வந்திருக்கிறது. இந்த பொருளாதார வளர்ச்சியில் குறிப்பாக கட்டுமானத்துறை என்பதும் இந்த வளர்ச்சிக்கு மிகுந்த அளவிலே உதவி செய்யக்கூடிய வகையில் 23- 24ஆம் ஆண்டுகளிலே 15.93 சதவிகிதம். அதேபோல 24 -25ஆம் ஆண்டுகளில 11% என்று அதற்கான பங்களிப்பை தந்திருக்கிறது. அதேபோல சேவைத்துறையை எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டிடைய வளர்ச்சியில் ஏறத்தாழ 53% தன்னுடைய பங்களிப்பை செலுத்தி உண்மையான வளர்ச்சி(real growth) என்கின்ற வகையிலே 24 -25ஆம் ஆண்டுகளில் நம்முடைய சேவைத்துறை 11.3% அளவிற்கு தன்னுடைய பங்களிப்பை தந்திருக்கிறது.

குறிப்பாக இந்த 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நாம் எட்ட வேண்டும் என்று சொன்னால் ஏற்றுமதியிலே நாம் மிகப்பெரிய ஒரு முன்னேற்றத்தை காண வேண்டும். அதேபோல நம்முடைய முதலமைச்சரின் தொடர் முன்னெடுப்புகளால் பல்வேறு உலக நாடுகளிலே பயணம் செய்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு அதன் வாயிலாக ஏறத்தாழ முதலீட்டின் சந்திப்பின் மூலமாக 11 லட்சத்து 40,731 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டு 1016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஏறத்தாழ 34 லட்சத்து 8522 இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை நாம் கொண்டு வந்திருக்கிறோம். ஏற்றுமதியை பொறுத்தமட்டில் அது நம்முடைய 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நாம் பெறுவதற்கு இந்த அடிப்படையாக அமைந்திருக்கக்கூடிய தமிழ்நாட்டினுடைய ஏற்றுமதி சாதனை மத்திய அரசினுடைய தரவுகளின் படி 2021 - 22 ஆம் ஆண்டிலே 1.86 பில்லியன் டாலராக இருந்தது.

22-23ஆம் ஆண்டில் 5.37 பில்லியன் டாலராகவும் 23-24 நிதி ஆண்டில் 9.56 பில்லியன் டாலராகும், கடந்த ஆண்டு 24 -25 நிதி ஆண்டில் 14.65 பில்லியன் டாலராக இந்த மின்னணு பொருள்களின் ஏற்றுமதி மூன்று ஆண்டுகளிலே ஏறத்தாழ ஏழு மடங்கு அதிகரித்து, 200% உயர்ந்திருக்கிறது.

இந்த மின்னணு பொருளுடைய ஏற்றுமதியிலே மிகப்பெரிய முன்னேற்றத்தை நம்முடைய தமிழ்நாடு பெற்றிருக்கிறது. முதல்வர் கொண்டுவந்துள்ள கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம், விடியல் பயண திட்டம் ,அதே மாதிரி காக்கும் கரங்கள் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம் என்கின்ற பல்வேறு திட்டங்களின் மூலமாக தமிழ்நாட்டினுடைய மக்களுடைய நல திட்டங்களிலும் தமிழ்நாடு அரசு ஒரு மாபெரும் கவனத்தை செலுத்தி இருக்கிறது.

அதேபோல ஜிஆர் என்று சொல்லக்கூடிய கிராஸ் என்ரோல்மென்ட் ரேஷியோ இன்றைக்கு உயர்கல்வியிலே 47% அகில இந்திய சராசரி 28.4% ஆக இருக்க போது தமிழ்நாடு இன்றைக்கு 47% உயர்ந்திருக்கிறது. உயர்கல்வி துறை அதிகமாக வளர்ச்சி பெற்றிருக்கக்கூடிய மாநிலமாக நாம் இன்றைக்கு வந்திருக்கிறோம். நிதி பற்றாக்குறையை நாம் எப்போதுமே அந்த நிதி மேலாண்மைக்கு உட்பட்டுதான் நாம் அதை கையாண்டிருக்கிறோம் வரக்கூடிய 25- 26 இந்த நிதியாண்டில் அது கட்டுப்படுத்தப்படும்

அதேபோல கடனுக்கும் மாநிலத்தினுடைய ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பேற்றத்துக்குமான விகிதம் கடந்த 2021 - 22 ஆண்டில் 27% மாக இருந்தது. 2024 -25 லே அது ஏறத்தாழ 26%ஆகவும் குறைவாகவே வந்திருக்கிறது என்பதையும் நான் இங்கே எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

எனவே ஒட்டுமொத்தமாக நீங்கள் பார்ப்பீர் என்று சொன்னால் தமிழ்நாட்டினுடைய இந்த நீடித்த ஒரு நிலையான வளர்ச்சி என்பது ஒட்டுமொத்தமாக நம்முடைய 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நாம் அடைவதற்கு நம்முடைய முதலமைச்சர் முன்னெடுப்பால் நடைபெற்று சாத்தியமாக இருக்கிறது. அதனுடைய இன்றைக்கு ஒட்டுமொத்த குறியீடாக இந்த 16% வளர்ச்சியை நம்முடைய ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கொடுத்திருப்பதும் நம்முடைய தமிழ்நாட்டினுடைய நிதி மேலாண்மைக்கு நம்முடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நம்முடைய தொழில் வளர்ச்சிக்கு நம்முடைய சமூக வளர்ச்சிக்கு நம்முடை முதலமைச்சருடைய தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்திருக்கக்கூடிய ஒரு மாபெரும் நற்சான்று ஆகும்

100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு 100% பங்களிப்பை தற்போது பங்களிப்பை குறைக்கிறார்கள் மத்திய அரசு 60%, மாநில அரசு 40% என்று வைக்கக்கூடிய பட்சத்தில் நம்முடைய நிதிச்சுமை கூடுகிறது. ஏற்கனவே மத்திய அரசாங்கம் கொடுக்கக் கூடிய பல்வேறு திட்டங்களிலே மத்திய அரசினுடைய பங்களிப்பை தொடர்ந்து குறைத்து கொண்டு வருகிறார் என்பதை பலமுறை நாங்கள் சொல்லியிருக்கிறோம்.

இந்த நிலைமை மத்திய அரசினுடைய பல்வேறு திட்டங்களிலே இது நீடித்திருக்கிறது. அதனால் மாநிலத்திற்கான நிதிச்சுமை அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதையும் நாங்கள் இங்கே குறிப்பிட்டு சொல்லியிருக்கிறோம். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைக்கு அந்த மசோதாவிலே அது குறித்து நமக்கு திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய சார்பில் தங்களுடைய கடுமையான எதிர்ப்பினையும் இன்றைக்கு பதிவு செய்ய இருக்கிறார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com