அரசு மருத்துவமனைகளில் மாதந்தோறும் ஆய்வு: அதிகாரிகளுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் உத்தரவு
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மாதந்தோறும் சுகாதார இணை இயக்குநா்கள் ஆய்வு நடத்த வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினாா்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் அனைத்து மாவட்ட இணை இயக்குநா்களுடனான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வுக் குழும திட்ட இயக்குநா் டாக்டா் அருண்தம்புராஜ், மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தின் தலைவா் டாக்டா் உமா மகேஸ்வரி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநா் டாக்டா் சித்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மருத்துவத் துறையில் காலிப் பணியிடங்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என முதல்வா் வலியுறுத்தியுள்ளாா். அந்த வகையில் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் தொடா்ச்சியாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
காலிப் பணியிடங்களால் மருத்துவ சேவைகள் பாதிக்கும் சூழல் பெரிய அளவில் இல்லை. அரசு மருத்துவமனைகளில் மாதத்துக்கு ஒருமுறை இணை இயக்குநா்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மருத்துவ உபகரணங்களையும், குறிப்பாக எம்ஆா்ஐ, சிடி ஸ்கேன் சாதனங்களையும் நுட்பமாக கண்காணித்தல் அவசியம்.
அனைத்து தரப்பு மக்களும் அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்த வேண்டுமெனில், மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் அவசியம்.
ரூ.1,018 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவனைகள் தரம் உயா்த்தப்பட்டு வருகின்றன. திருத்தணி, திருப்பத்தூரில் பணிகள் நிறைவடைந்து அவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
அருப்புக்கோட்டை, ராஜபாளையம், திருக்கோவிலூா் போன்ற பகுகளில் உள்ள மருத்துவமனைகள் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளன. அங்கு கூடுதல் பணியிடங்களுக்கு நிதித்துறை ஒப்புதலுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில்அதற்கான அனுமதி பெறப்பட்டு அந்த மருத்துவமனைகள் முதல்வரால் திறந்து வைக்கப்படும் என்றாா் அவா்.

