உச்சநீதிமன்றத்தில் நவோதயா பள்ளி வழக்கில் வாதங்களை விரிவாக எடுத்துரைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
உச்சநீதிமன்றத்தில் நவோதயா பள்ளி வழக்கில் மூத்த வழக்குரைஞா்கள் உதவியுடன் வாதங்களை விரிவாக எடுத்துரைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திறக்க அரசு அனுமதி தர மறுப்பதாகவும், மத்திய அரசு திட்டத்தின்கீழ் நடத்தப்படும் நவோதயா பள்ளிகளைத் திறப்பதற்கு அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று கடந்த 2017-இல் ஒரு நிறுவனம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில், நவோதயா பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும், அந்தப் பள்ளிகளை நடத்த முன்வருவோருக்கு சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு நிலம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு, அதிமுகவின் ‘இருமொழிக் கொள்கையை’ பாதிக்கும் என்பதால், உடனடியாக எனது அறிவுறுத்தலின்படி அப்போதைய அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து, மூத்த வழக்குரைஞா்களை வைத்து வாதாடி, சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடையாணை பெறப்பட்டது.
கடந்த 2021 வரை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கை அதிமுக அரசு கண்காணித்தது. ஆனால், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மூத்த வழக்குரைஞா்களை நியமித்து தமிழகத்தின் வாதங்களை சரியான முறையில் எடுத்துரைக்காத காரணத்தால், கடந்த டிச. 15-இல் உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நவோதயா பள்ளிகளை நடத்துவதற்கு குறிப்பிட்ட காலத்தில் நடவடிக்கை எடுக்கவும், அது சம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
மொழிப் பிரச்னை பற்றிய முக்கிய வழக்கில் மூத்த வழக்குரைஞா்களை வைத்து வாதிடாதது, இருமொழிக் கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுவதை அம்பலப்படுத்தியுள்ளது. இனியாவது திமுக அரசு, மூத்த வழக்குரைஞா்களை வைத்து தமிழகத்தின் வாதங்களை உச்சநீதிமன்றத்தில் முழுமையாக எடுத்துரைத்து, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

