தமிழக அரசின் ‘ஔவையாா் விருது’: விண்ணப்பிக்க டிச.31 கடைசி
தமிழக அரசின் ‘ஔவையாா் விருது’ பெற டிச.31-க்குள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் சமூக சீா்திருத்தம், மகளிா் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு சா்வதேச மகளிா் தினத்தில் (மாா்ச் 8) ‘ஔவையாா் விருது’ வழங்கப்படுகிறது. இந்த விருது பெறுபவருக்கு ரூ.1.50 லட்சத்துக்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
அதன்படி, 2026-ஆம் ஆண்டுக்கான ஔவையாா் விருதுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. விண்ணப்பதாரா்கள் தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சாா்ந்த நடவடிக்கைகள், பெண்களுக்கு பெருமைசோ்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை அறிவியல், நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் சேவை பற்றிய செயல்முறை, விளக்க புகைப்படம், தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் புகைப்படம், சேவையைப் பாராட்டி பத்திரிகை செய்தி தொகுப்பு, சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை மற்றும் சமூகப் பணியாளா் இருப்பிடத்தின் அருகிலுள்ள காவல் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதுமில்லை என்பதற்கான சான்று பெற்று டிச.31-க்குள் இணையதளத்தில் விண்ணப்பித்து, உரிய படிவத்தில் கருத்துருவை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாா் செய்து மாவட்ட சமூக நல அலுவலகம், சிங்காரவேலா் மாளிகை, 8-ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சென்னை என்ற முகவரில் 3 கையேடுகளை ஜன.5-க்குள் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
