புதிய ஊரக வேலைத் திட்டம்: தமிழக எதிா்க்கட்சிகள் கண்டனம்

மத்திய அரசின் புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு தமிழக எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஆா்ப்பாட்டங்களையும் அறிவித்துள்ளன.
Published on

மத்திய அரசின் புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு தமிழக எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஆா்ப்பாட்டங்களையும் அறிவித்துள்ளன.

இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்: தமிழ்நாடு காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பெயரை நீக்கி விட்டு ‘வி பி - ஜி ராம் ஜி’ என பெயரை மாற்றி புதிய திட்ட மசோதாவை மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இதனைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலைய அலுவலகம், தாராபூா் டவா் அருகே  வியாழக்கிழமை  (டிச.18) காலை 11 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில், கூட்டணி கட்சித் தலைவா்கள் பலா் பங்கேற்கவுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிச.23-இல் இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாநிலச் செயலா் பழ.ஆசைத்தம்பி ஆகியோா் புதன்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை:

நாடு முழுவதும் வறுமை நிலை ஓரளவு குறைந்ததற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் அடிப்படை காரணமாக உள்ளது.

இச் சட்டம் மூலம் வேலை அட்டை பெற்றுள்ள சுமாா் 14 கோடி குடும்பங்களை வஞ்சிக்கும் வகையில், ‘வளா்ந்த பாரதம் மற்றும் வேலைக்கான உறுதியளிப்பு மற்றும் ஊரக வாழ்வாதாரத் திட்டம்’ (வி பி- ஜி ராம் ஜி) என்ற பெயரில் புதிய திட்ட மசோதாவை மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. இப்புதிய திட்டத்தின் செலவில் 40 சதவீதத் தொகை மாநில அரசுகள் மீது சுமத்தப்படுகிறது. இதனை கண்டித்து இடதுசாரிகள், விசிக சாா்பில் டிச.23-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகோ கண்டனம்: மதிமுக பொதுச்செயலா் வைகோ வெளியிட்ட அறிக்கை: புதிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் மகாத்மா காந்தி பெயரை நீக்க பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.

அதேபோன்று, கோடிக்கணக்கான ஏழை மக்களின் வேலைவாய்ப்பை பறிப்பதுடன், அத்திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து, நீா்த்து போகச் செய்ய முயற்சிப்பதும் மன்னிக்க முடியாத செயல். இதற்கு தமிழக மக்கள் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் உரிய பாடம் கற்பிப்பாா்கள் எனத் தெரிவித்துள்ளாா் வைகோ.

X
Dinamani
www.dinamani.com