வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

நாளை(டிச. 19) வெளியாகவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருப்பதை உறுதி செய்துகொள்வது பற்றி...
கோப்புப் படம்
கோப்புப் படம்IANS
Updated on
2 min read

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்(எஸ்எஸ்ஆர்) பணிகள் முடிவடைந்த நிலையில் நாளை(டிச. 19) வெளியாகவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இடம்பெறுமா என்பதை தெரிந்துகொள்ளலாம்.

வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகவிருந்தாலும் நீங்கள் வழங்கிய கணக்கீட்டுப் படிவங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணைய இணையதளத்தில் உங்களுடைய விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டால் உங்களுடைய பெயர், தொகுதி, வாக்குச்சாவடி இடம், மாவட்ட தேர்தல் அதிகாரி, வாக்குச்சாவடி அலுவலர் உள்ளிட்டோரின் விவரங்கள் கிடைக்கின்றன.

பிகாரைத் தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்றன. இதில் மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியாகிவிட்டன.

தமிழ்நாட்டிலும் வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்கி, அதை நிரப்பிப் பெற்று பின்னர் அவை தேர்தல் ஆணைய இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டன.

கடந்த டிச. 4 ஆம் தேதியே இந்த பணிகள் தமிழகத்தில் முடிவடைய இருந்த நிலையில் வாக்காளர்கள், படிவங்களை நிரப்பி வழங்குவதற்கு கால அவகாசம் இரு முறை நீட்டிக்கப்பட்டது.

இறுதியாக டிச. 14 ஆம் தேதியுடன் எஸ்ஐஆர் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நாளை(டிச. 19) தமிழ்நாட்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

இந்த பட்டியலில் போலி வாக்காளர்கள், இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் என சுமார் 60 லட்சத்துக்கும் அதிகமானோர் நீக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறுமா என்பதை முன்கூட்டியே அதாவது இன்றே அறிந்துகொள்ளலாம்.

https://electoralsearch.eci.gov.in/ என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திற்குச் சென்று உங்களுடைய வாக்காளர் அடையாள எண் அல்லது உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை அளித்தால் விவரங்கள் திரையில் தோன்றும்.

அதில் உங்களுடைய பெயர், தந்தை பெயர், மாவட்டம், தொகுதி, வாக்குச்சாவடி இடம், வாக்குச்சாவடி தொகுதி எண் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

மேலும் விவரங்களுக்கு(view details) என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய விவரங்கள் அனைத்தும் ஒரு தனி திரையில் திறக்கும்.

அதில் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களுடன் வாக்குச்சாவடி அதிகாரி, வாக்குச்சாவடி அலுவலர் ஆகியோரின் பெயர் மற்றும் தொடர்பு எண்களும் இருக்கும். இந்த பக்கத்தை நீங்கள் பிடிஎப் வடிவில் எடுத்து சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

வாக்குச்சாவடி அலுவலரிடம் நீங்கள் எஸ்ஐஆர் கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பிக் கொடுத்திருந்தால் உங்களுடைய பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். நீங்கள் படிவம் நிரப்பிக் கொடுத்தும் பட்டியலில் பெயர் இல்லை என்றால் இந்த ஆவணத்தைக் கொண்டு வாக்குச்சாவடி அலுவலரை அணுகலாம்.

ஒருவேளை படிவம் நிரப்பிக் கொடுக்கவில்லை என்றால் புதிய வாக்காளராக சேர்வதற்கு வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 6 -யைப் பெற்று உரிய ஆவணங்களுடன் அதனை நிரப்பிக் கொடுக்க வேண்டும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டிருந்தாலோ அல்லது ஏதேனும் மாற்றம் இருந்தாலோ டிசம்பர் 19 முதல் 2026 ஜன. 18 ஆம் தேதி வரை வாக்குச்சாவடி அலுவலரைத் தொடர்புகொண்டு மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கணக்கீட்டு படிவங்களை நிரப்பிக் கொடுக்காதவர்களும் இந்த காலகட்டத்தில் படிவம் 6 மூலமாக புதிய வாக்காளராக சேர்த்துக்கொள்ள முடியும்.

அதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்.

Tamilnadu SIR: Is your name in the draft voter list?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com