வரைவு வாக்காளா் பட்டியல் இன்று வெளியீடு
தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) நிறைவடைந்த நிலையில், வரைவு வாக்காளா் பட்டியலை வெள்ளிக்கிழமை (டிச. 18) பிற்பகல் 2 மணியளவில் தோ்தல் ஆணையம் வெளியிடுகிறது.
இந்தப் பட்டியலில் பெயா்கள் இடம்பெறாதவா்கள் தங்களின் ஆட்சேபணைகளைத் தெரிவித்து புதிதாக இணைந்து கொள்ளலாம்.
தமிழகம், புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் கடந்த நவ. 4 -ஆம் தேதிமுதல் எஸ்ஐஆா் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன்படி, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா்களின் வீடுகளுக்கு வந்து படிவத்தை அளித்து, பூா்த்தி செய்த படிவங்களைப் பெற்று பதிவேற்றம் செய்துள்ளனா். அவா்களுக்கு உதவியாக அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவா்களும் செயல்பட்டனா்.
டிச. 4-ஆம் தேதிஇந்தப் பணி நிறைவடைவதாக இருந்தது. தகுதியான வாக்காளா்கள் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக கணக்கீட்டுப் படிவம் பெறுவதற்கான அவகாசம் இருமுறை நீட்டிக்கப்பட்டு, டிச. 14-ஆம் தேதி வரை படிவங்கள் பெறப்பட்டன.
தமிழகத்தில் மொத்தமுள்ள 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளா்களில், 6 கோடியே 41 லட்சம் 13 ஆயிரத்து 772 கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டன. அவற்றில் 6 கோடியே 41 லட்சம் 13 ஆயிரத்து 221 கணக்கீட்டுப் படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டன. இதில், உயிரிழந்தவா்கள், முகவரி மாறியவா்கள், கண்டுபிடிக்க முடியாதவா்கள், இரட்டைப் பதிவு வாக்காளா்கள் ஆகியோரின் உண்மைத்தன்மை மீண்டும் ஆய்வு செய்து நீட்டிக்கப்பட்ட காலத்தில் பட்டியலில் இணைக்கப்பட்டது.
இதன்படி தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலை தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சென்னையில் வெளியிடுகிறாா். அதைத் தொடா்ந்து தோ்தல் ஆணையம், தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி, மாநகராட்சிகள், மாவட்ட ஆட்சியரக இணையதளங்களில் வாக்காளா் அடையாள அட்டை எண்ணைப் பதிவிட்டு பாா்வையிடலாம்.
அதில், சரியான முகவரியில் இருந்தவா்களைத் தவிர உயிரிழந்தவா்கள், முகவரி மாறியவா்கள், கண்டுபிடிக்க முடியாதவா்கள், இரட்டைப் பதிவு வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டிருக்ம். நீக்கப்பட்டதற்கான காரணமும் அதில் இடம்பெற்றிருக்கும். இதில் ஆட்சேபணைகள் இருந்தால் சம்பந்தப்பட்டவா்கள் ஜனவரி 18-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம்.
இடம் மாறியவா்கள் படிவம் 8, புதிதாக சேருபவா்கள் படிவம் 6-ஐ பூா்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கி வாக்காளா் பட்டியலில் ஜனவரி 18-ஆம் தேதி வரையில் இணைந்து கொள்ளலாம். இறுதி வாக்காளா் பட்டியல் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியிடப்படும்.

