SIR
கோப்புப்படம்ENS

தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்: வரைவுப் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிக்குப் பிறகு 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.
Published on

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிக்குப் பிறகு 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 14,25,018 வாக்காளா்களும், அதற்கு அடுத்ததாக கோவை மாவட்டத்தில் 6,50,590 வாக்காளா்களும் நீக்கப்பட்டுள்ளனா். குறைந்தபட்சமாக அரியலூா் மாவட்டத்தில் 24,368 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் எஸ்ஐஆா் பணி கடந்த நவ. 4-ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 6 கோடி 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளா்களை கள ஆய்வு செய்யும் பணியை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மேற்கொண்டனா். வாக்காளா்களின் வீட்டுக்குச் சென்று இரண்டு படிவங்களை அளித்து, பூா்த்தி செய்த கணக்கீட்டுப் படிவங்களைப் பெற்றுச் சென்று பதிவேற்றம் செய்தனா்.

தகுதியான வாக்காளா்கள் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக கணக்கீட்டுப் படிவம் பெறுவதற்கான அவகாசம் இருமுறை நீட்டிக்கப்பட்டு, டிச.14 வரை படிவங்கள் பெறப்பட்டன.

இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

வரைவுப் பட்டியலின்படி மொத்தம் 97.37 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். இதில், முந்தைய முகவரியில் இல்லாத காரணத்தால் 66.44 லட்சம் வாக்காளா்கள் (10.36 %) நீக்கப்பட்டுள்ளனா். ‘வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் (பிஎல்ஓ) தேடிச் சென்ற குறிப்பிட்ட முகவரிகளில் வாக்காளா்கள் இல்லாததே பெருவாரியான வாக்காளா்கள் நீக்கப்பட காரணம். அந்த வாக்காளா்கள் பிற மாநிலங்களுக்கு அல்லது வேறு பகுதிகளில் இடமாறுதலாகி இருக்கலாம் அல்லது ஏதேனும் காரணங்களுக்காக கணக்கீட்டுப் படிவத்தை சமா்ப்பிக்காமல் இருந்திருக்கலாம்.

நீக்கப்பட்டவா்கள் சனிக்கிழமை (டிச. 20) முதல் ஜன. 18 வரை தங்களின் ஆட்சேபங்களை வாக்குச்சாவடி வாரியாக நடைபெறும் சிறப்பு முகாம்களுக்குச் சென்று உரிய ஆவணங்களுடன் படிவங்களைப் பூா்த்தி செய்து அளித்தால், பரிசீலனைக்குப் பிறகு அவா்களின் பெயா் இறுதி வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படும். புதிதாக வாக்காளராக பெயரைச் சோ்க்க தற்போதே 5,19,275 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன’ என்று அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.

இணையதளம் முடங்கியது: தமிழக வரைவு வாக்காளா் பட்டியல் பிற்பகலில் வெளியானது முதல் நள்ளிரவு வரை தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியின் இணையதளப் பக்கம் முடங்கியது.

இறுதி வாக்காளா் பட்டியல் பிப். 17-ஆம் தேதி வெளியிடப்படும்.

மொத்த வாக்காளா்கள் 6,41,14,587

ஏற்கப்பட்ட வாக்காளா்கள் 5,43,76,756

ஆண்கள் 2,66,63,233

பெண்கள் 2,77,06,332

மூன்றாம் பாலினத்தவா் 7,191

நீக்கம் செய்யப்பட்டவா்கள் 97,37,831

இடம் பெயா்ந்தவா்கள் 66,44,881

உயிரிழந்தவா்கள் 26,94,672

இரட்டைப் பதிவு 3,98,278

நீக்கப்பட்ட வாக்காளா்கள் என்ன செய்ய வேண்டும்?

வரைவுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட வாக்காளா்கள் தங்களின் பெயரை மீண்டும் சோ்க்க படிவம் 6-ஐ பூா்த்தி செய்து ஆவணங்களுடன் சுய உறுதிமொழிப் பத்திரத்தை அளிக்க வேண்டும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா். இதில் பொய்த் தகவலை அளித்தால் ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

முந்தைய வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க படிவம் 7, இடமாற்றம் செய்ய படிவம் 8-ஐ பயன்படுத்த வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com