

தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
பிகாரைத் தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்றன.
தமிழகத்தில் நவ. 4 ஆம் தேதி தொடங்கிய இந்த பணிகள் டிச. 4 ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில் வாக்காளர்கள், படிவங்களை நிரப்பி வழங்குவதற்கு இரு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆர்) பணிகளின் ஒரு பகுதியாக 3 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரேதங்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதன்படி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், கோவா ஆகிய 3 மாநிலங்களிலும் புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்டது.
தமிழகத்தில் இரண்டு நாள்கள் கழித்து இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் உள்ள மொத்தமுள்ள 6,41,14,587 வாக்காளர்களில் 97,37,831 பெயர்கள் நீக்கப்பட்டு, 5,43,76,755 பேர் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மொத்த வாக்காளர்களில் 15.18 சதவிகிதம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் தற்போது 2.77 கோடி பெண் வாக்காளர்களும், 2.66 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர்.
இறந்த வாக்காளர்கள் 26,32,672 பேரும், முகவரி இல்லாதவர்கள் - 66,44,881 பேரும், இரட்டைப்பதிவுகள் 3,39,278 பேரும் என மொத்தமாக 97,37,831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 14,25,018 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “மொத்தமுள்ள 97,37,831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர் அல்லது இணையத்தில் கூட விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு முகாம்களும் நடத்தப்படவுள்ளன. இரண்டு வாரங்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவிருக்கின்றன. 2002, 2005 வாக்காளர் பட்டியல் விவரம் எதுவும் இல்லாதவர்கள் அதற்குப் பதிலாக வேறு ஆவணம் எதாவது சமர்ப்பிக்கலாமா என்பது பற்றி தேர்தல் அலுவலரிடம் கேட்டுக்கொள்ளலாம்.
இறந்தவர்கள், முகவரி இல்லாதவர்கள் உள்ளிட்ட இறுதிப்பட்டியல் பிப்ரவரியில் வெளியிடப்படும், சென்னையில் 35 சதவிகித வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர்.
விடுபட்டவர்கள் கவலைப்படத் தேவையில்லை. இன்னும் ஒரு மாதம் காலம் இருப்பதால் படிவம்-6 உடன் உறுதிமொழி படிவம் ஒன்றையும் கொடுக்க வேண்டும், உறுதிமொழி குறித்து இணையத்தில் தெரிந்துகொள்ளலாம். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு நடத்தப்படும், அதில் கலந்துகொண்டு ஜனவரி 18 ஆம் தேதிக்குள் வாக்காளர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.