சாலை வலம், பொதுக் கூட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் ஜன. 5-க்குள் வெளியிட உத்தரவு!

தேர்தல் பிரசார வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...
Madras High Court
ENS
Updated on
1 min read

தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் மற்றும் சாலை வலம் தொடர்பான இறுதி வழிகாட்டு விதிமுறைகளை ஜனவரி 5 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்களின் சாலை வலம் நிகழ்ச்சிகளுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக்கோரி தவெக, அதிமுக மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சிகளும் மதுரையைச் சேர்ந்த திருக்குமரன், பிரகாஷ் உள்ளிட்ட தனிநபர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 23 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், 40-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் கருத்துக்களைப் பெற்று, பொதுக்கூட்டங்கள், சாலை வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது தமிழக அரசு.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அதிமுக, தவெக மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஆலோசனைகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கில் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

வழக்கில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு, சாலை வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்திருந்த கட்சிகள் சார்பில் ஏராளமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியது.

இந்த ஆலோசனைகளை பரிசீலித்து, ஜனவரி 5 ஆம் தேதிக்குள் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்பின், வழிகாட்டு நெறிமுறைகளில் ஏதேனும் ஆட்சேபங்கள் இருந்தால், அதுசம்பந்தமாக வழக்கு தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Summary

Madras HC order tn govt to release the guidelines for road show before jan 5

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com