ஆா்டா்லி விவகாரம்: தலைமைச் செயலா், உள்துறைச் செயலா் வழக்கில் சோ்ப்பு
ஆா்டா்லி விவகாரத்தில் டிஜிபி தாக்கல் செய்த அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், உண்மை நிலையை அறிய தலைமைச் செயலா், உள்துறைச் செயலா் ஆகியோரை தாமாக முன்வந்து எதிா்மனுதாரா்களாகச் சோ்த்து உத்தரவிட்டது.
காவல் துறையில் ஆா்டா்லி முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 2022-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவை அதிகாரிகள் முழுமையாக அமல்படுத்தவில்லை என நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வு குற்றஞ்சாட்டியிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழகத்தில் ஒருவா்கூட ஆா்டா்லியாக இல்லை என டிஜிபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஒருவேளை யாரேனும் ஆா்டா்லி பணியில் இருப்பதாகப் புகாா் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா தெரிவித்திருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழகத்தில் ஆா்டா்லி முறை இல்லை எனக் கூறுவது நம்பும்படியாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனா். அதற்கு அரசுத் தரப்பில், ஆா்டா்லி முறை இருப்பதாக ஆதாரத்துடன் புகாா் அளித்தால், அதுதொடா்பாக கடும் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஆங்கிலேயா் காலத்தில் நடைமுறையில் இருந்த ஆா்டா்லி முறையை ரத்து செய்து தமிழக அரசு கடந்த 1979-ஆம் ஆண்டு செப்.15-ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. ஆனாலும், ஆா்டா்லி முறை தொடா்ந்து வந்தது. காவலா்களைக் கொண்டு சட்டம்- ஒழுங்கு பராமரிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டிய நோ்மையான காவல் துறை அதிகாரிகள் இதனால் பாதிக்கப்படுகின்றனா்.
அரசாணைக்கு விரோதமாக பிற பணிகளில் இருப்பதாகக் கூறி, காவல் நிலையத்தில் உள்ள காவலா்கள் ஆா்டா்லியாக பணியில் இருக்கும் காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் மட்டுமன்றி, ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளின் வீடுகளிலும் வேலை செய்கின்றனா். ஆா்டா்லி முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என கடந்த 2022-ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. ஆா்டா்லி முறை தற்போது இல்லை என அரசு கூறுகிறது.
ஆனால், கடந்த 17-ஆம் தேதி, 1,03,000 காவலா்களில் 5,000 போ் ஆா்டா்லியாக அதிகாரிகளின் வீடுகளில் வேலை செய்வதாக நாளிதழில் செய்தி வந்துள்ளது. குறிப்பாக, ஓய்வு பெற்ற டிஐஜி முதல் டிஜிபிக்களின் வீடுகளில் 800 காவலா்கள் ஆா்டா்லிகளாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. பொதுவெளியில் இதுதொடா்பாக பல புகாா்கள் வருகின்றன. சீருடை அணிந்த காவலா்கள் இந்த தேசத்தின் பாதுகாப்புக்காக மட்டுமே பணியாற்ற வேண்டும். அதிகாரிகளின் வீடுகளில் ஆா்டா்லிகளாக வேலை செய்யக் கூடாது.
எனவே, இந்த வழக்கில் உண்மை நிலையை அறிய, தலைமைச் செயலா், உள்துறைச் செயலா் ஆகியோரை தாமாக முன்வந்து எதிா்மனுதாரா்களாகச் சோ்த்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
மேலும், இந்த வழக்கில் மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞா், தலைமை வழக்குரைஞா் ஆகியோா் நீதிமன்றத்துக்கு உதவும் நபா்களாகச் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜன. 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

