மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே பாஜகவுக்கு வேப்பங்காயாக கசக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின்.
கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின்.
Updated on
3 min read

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே பாஜகவுக்கு வேப்பங்காயாக கசக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், தரிசன பூமி, டக்கரம்மாள்புரத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் அவர் ஆற்றிய உரையில், தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற கிறிஸ்துவ பெருமக்களுக்கு என்னுடைய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த விழாவை ஒரு மதத்தின் விழாவாக இல்லாமல், மனிதநேய மகத்துவ விழாவாக கொண்டாடுகின்ற உங்கள் எண்ணத்துக்கு என்னுடைய பாராட்டுக்கள்! வாழ்த்துகள்! கிறிஸ்துமஸ் விழா என்பது, தேவாலயங்களில் மட்டுமல்லாமல், தெருக்களில், வீடுகளில், பணியிடங்களில் கொண்டாடப்படுகின்ற விழாவாக இருக்கிறது!

கிறிஸ்துமஸ் விழா என்பது, நம்பிக்கையை விதைக்கும் விழாவாக, பரிவு காட்டும் விழாவாக, அமைதிக்கு வழிகாட்டும் விழாவாக, மகிழ்ச்சியை கொண்டாடும் விழாவாக இருக்கிறது! அதனால்தான், மதங்களைக் கடந்து, அனைத்து மக்களும் கிறிஸ்துமஸ் நாளில் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறார்கள்! அன்புநெறியை, பண்புநெறியாக வளர்த்தெடுப்பதுதான் கொண்டாட்டங்களின் அடிப்படையாக இருக்க வேண்டும்! வெறுப்புணர்ச்சி என்பது, பாவங்களைத்தான் செய்ய தூண்டும்; ஆனால், அன்பு என்பது அத்தனை பாவங்களையும் போக்கும்!

அப்படிப்பட்ட அமைதியான, அன்பான சமுதாயத்தை, சகோதரத்துவ உணர்வுமிக்க சமுதாயத்தை கட்டமைக்க வேண்டியது, நம்முடைய எல்லோருடைய கடமை! இதுதான், இன்றைய இந்தியாவுக்கு தேவை! இந்துக்களும் - முஸ்லீம்களும் - கிறிஸ்துவர்களும் - ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக வாழவேண்டும்! அதற்கு இதுபோன்ற விழாக்கள் துணை நிற்கவேண்டும்!

திராவிட முன்னேற்றக் கழகம்தான், சிறுபான்மையினர் நலனில் உண்மையான அக்கறை கொண்டுள்ள இயக்கம்! திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலங்களில் தான் சிறுபான்மையினர் நலன் காக்கும் பொற்காலம் என்று சொல்கின்ற அளவிற்கு ஏராளமான முன்னெடுப்புகளை, திட்டங்களை நிறைவேற்றி வழங்கியிருக்கிறோம்! இங்கே பேசியவர்கள் பலர் அதைப்பற்றி எடுத்துச் சொன்னார்கள்.

அனைத்து மதங்கள் சார்ந்தும் எந்த பாகுபாடும் இல்லாமல் கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறோம். திருப்பணிகளை செய்கிறோம்! இதற்கு, தமிழ்நாட்டு மக்களான நீங்கள் எல்லோரும் பக்கபலமாக இருக்கிறீர்கள்! இதுதான் சிலருடைய கண்களை உறுத்துகிறது! “எப்படி தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்கலாம்… இங்கே ஒன்றுக்குள் ஒன்றாக

பழகுகின்ற மக்களை எதிரிகளாக பிரித்து வைக்கலாம்!” என்று பலர் யோசிக்கிறார்கள்! ஆனால், ஆன்மீகத்தின் பெயரால், சில அமைப்புகள் அழைத்துச் செல்ல நினைக்கின்ற வழி, வன்முறைக்கான பாதை என்பதை தமிழ்நாடு உணர்ந்து இருக்கிறது! இங்கே ஒரு கோயிலில், திருவிழா நடந்தால், அங்கே வருகின்ற மக்களுக்கு, முஸ்லீம் மக்களும் - கிறித்துவ மக்களும் உணவு, மோர் என்று வழங்குவார்கள்… வேளாங்கண்ணி தேவாலயத்துக்கும், அருகாமையிலுள்ள வீட்டில் நடைபெறுகின்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்கும் இந்துக்கள் செல்வார்கள்.

ரம்ஜான் நோன்பு காலத்தில், முஸ்லீம் மக்களின் நோன்பு கஞ்சியும் - ரம்ஜான் பிரியாணியும், இந்துக்கள் வீட்டுக்கு தேடி வரும்! இந்த சகோதர உணர்வும், பகுத்தறியும் திறனும்தான் நம்முடைய தமிழ்நாடு! “எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கவேண்டும்” என்ற இயேசு பெருமானின் எண்ணத்துக்கு இலக்கணமாக, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்! எந்த மதத்தை சேர்ந்தவங்களாக இருந்தாலும், மதத்தின் பெயரால் ஒருவர், உங்கள் உணர்வுகளை தூண்டுகிறார் என்றால், அவரை “சந்தேகப்படுங்கள், கவனமாயிருங்கள், ஒருவரும் உங்களை வஞ்சிக்காதபடி எச்சரிக்கையாக இருங்கள்” எனும் பைபிள் வாசகத்தை இங்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

இன்றைக்கு ஒன்றியத்தை ஆளும் அரசு, சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அரசாக இருக்கிறது. அதனால்தான், அவர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வந்தபோது, கடுமையாக எதிர்த்து போராட்டங்களை நடத்தினோம்! ஆனால், துரோகம் செய்வதையும், மக்கள் நலனை அடகு வைப்பதையும் மட்டுமே தன்னுடைய இலட்சிய அரசியலாக எடுத்துக் கொண்டு செயல்பட்டு வரும் அ.தி.மு.க., அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது! ஒன்றிய பா.ஜ.க-வை பொறுத்தவரைக்கும், மதச்சார்பின்மை என்ற சொல்லை கேட்டாலே வேப்பங்காயாக கசக்கின்றது. அதை அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்தே நீக்கவேண்டும் என்று துடியாக துடிக்கிறார்கள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்து, ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே பண்பாடு - ஒரே தேர்தல் - ஒரே கட்சி – ஒரே தலைவர் என்ற எதேச்சாதிகார எதிர்காலத்தை உருவாக்க நினைக்கிறார்கள்! தமிழ்நாட்டிலும், தங்களுடைய பிளானை செயல்படுத்த நினைக்கிறார்கள்! எப்படிப்பட்ட ஆபத்தையும், பா.ஜ.க.வின் நாசகார திட்டங்களையும் எதிர்த்து முறியடிக்கின்ற வலிமை, தமிழ்நாட்டுக்கும் – திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இருக்கிறது! இதுதான், நம்முடைய ஹிஸ்டரி! இப்போதுகூட, சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் எனப்படும் S.I.R. நடவடிக்கையை மேற்கொண்டார்கள்… இதனால், என்ன மாதிரியான பிரச்னைகள் எல்லாம் நாட்டில் உருவாகியிருக்கிறது என்று உங்களுக்கே தெரியும்… அப்படிப்பட்ட பிரச்னைகள் தமிழ்நாட்டில் வந்துவிடக்கூடாது என்று தான், தி.மு.க. சார்பில், நாம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம்.

ஒருபக்கம், நீதிமன்றத்தில் சட்டரீதியாக போராட்டத்தைத் தொடர்ந்தாலும், மக்கள் மன்றத்தில், ஒவ்வொருவர் வீட்டுக்கும் சென்று, அவர்களுடைய வாக்குரிமையை உறுதிசெய்ய, திமுக நிர்வாகிகள் துணையாக இருந்தார்கள். இந்த நிலையில், நேற்று, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது! நீங்கள் எல்லோரும் தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொருவரும், உங்களுடைய வாக்கு இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். S.I.R-ஐ பொறுத்தவரைக்கும், நம்முடைய பணிகள் இன்னும் முடியவில்லை. உங்களுடைய வாக்குரிமை பறிக்கப்பட்டிருந்தால், கழக நிர்வாகிகள் உங்கள் வீடு தேடி வருவார்கள். வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்ப்பதற்கான உதவிகள அவர்கள் செய்வார்கள்.

நீங்கள் கவலைப்படாதீர்கள். நம்மை வாக்களிக்க விடாமல் தடுப்பதற்கு, ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு முயற்சிகளை செய்வார்கள். அது எல்லாவற்றையும் முறியடித்து, நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்! உங்கள் நலனையும் - உரிமைகளையும் பாதுகாக்க - திராவிட முன்னேற்றக் கழகமும் - திராவிட மாடல் அரசும் என்றைக்கும் உங்களுக்குத் துணை நிற்கும்! நீங்களும் எப்போதும் எங்களுக்கு துணை நிற்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

Summary

Chief Minister Stalin has said that the very word secularism makes the BJP feel bitter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com