நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்
Updated on
2 min read

நெல்லை மாவட்டத்துக்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார், இந்த சுற்றுப் பயணத்தின்போது பொருநை அருங்காட்சியகம் திறப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையொடடி நெல்லை மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

உற்சாக வரவேற்பு

சென்னையில் இருந்து இன்று காலை 11 மணி அளவில் விமானம் மூலம் புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடிக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் நெல்லைக்கு வரும் அவருக்கு, மாவட்ட எல்லையான கே.டி.சி. நகர் மற்றும் சாரதா கல்லூரி பகுதிகளில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் கிரகாம்பெல் மற்றும் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வரவேற்பு அளிக்கின்றனர்.

கிறிஸ்துமஸ் விழா மற்றும் அருங்காட்சியகம் திறப்பு

மதியம் வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கும் முதலமைச்சர், மாலை 6 மணி அளவில் பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் பிரம்மாண்டமான 'கிறிஸ்துமஸ் பெருவிழா'வில் பங்கேற்கிறார்.

அதனைத் தொடர்ந்து, ரெட்டியார்பட்டி மலைச் சாலையில் ரூ.62 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 'பொருநை அருங்காட்சியகத்தை' முதலமைச்சர் திறந்து வைக்கிறார். தமிழர்களின் நாகரிகத்தைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை அவர் பேட்டரி கார் மூலம் சென்று பார்வையிடுகிறார்.

ஞாயிற்றுக்கிழமை காலை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் பிரம்மாண்ட அரசு விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடக்கி வைக்கிறார்.

2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

முதலமைச்சர் வருகையையொட்டி நெல்லை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா 250 போலீசார் என மொத்தம் 2,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ட்ரோன்கள் பறக்கத் தடை

பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று (20-ந்தேதி) காலை 6 மணி முதல் நாளை (21-ந்தேதி) மாலை 6 மணி வரை நெல்லை மாநகர எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் இதர வான்வழிச் சாதனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எச்சரித்துள்ளார்.

வெடிகுண்டு சோதனை

விழா நடைபெறும் இடங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள் நவீன கருவிகள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகளில் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

7 கி.மீ தூரத்திற்கு வரவேற்பு

முதலமைச்சர் வருகைக்காக வண்ணார்பேட்டை முதல் டக்கரம்மாள்புரம் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்குச் சாலையின் இருபுறமும் திமுக கொடிகள் மற்றும் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. விழா நடைபெறும் பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வந்து செல்லும் சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுப் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com