பிஎஸ்என்எல் தென்மண்டல அலுவலகத்தில் தீ விபத்து: தொலைபேசி, இணையதள சேவை பாதிப்பு
சென்னையில் உள்ள தென்மண்டல பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால், தொலைபேசி, இணையதள சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை அண்ணா சாலை-டேம்ஸ் சாலை சந்திப்பில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தென் மண்டல அலுவலகம் செயல்படுகிறது.
8 தளங்களுடன் கூடிய இந்த கட்டடத்தின் இரண்டாவது தளத்திருந்து சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் கரும்புகை வெளியேறியது. அப்போது அலுவலகத்தில் இருந்த உதவி கணக்காளா் உடனடியாக 6-ஆவது தளத்துக்குச் சென்று கைப்பேசி மூலம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தாா்.
எழும்பூா், தேனாம்பேட்டை, வேப்பேரி, கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூா் உள்ளிட்ட 8 இடங்களிலிருந்து விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். 6-ஆவது மாடியில் சிக்கித் தவித்த உதவி கணக்காளா் மன்சூரை தீயணைப்பு படையினா் ‘ஸ்கை லிப்ட் மூலம் பாதுகாப்பாக மீட்டனா்.
அதற்குள் தீ 3-ஆவது, 4-ஆவது மற்றும் 5-ஆவது தளத்துக்கு தீ பரவியது. தீயை விரைந்து அணைப்பதற்காக 4 மெட்ரோ தண்ணீா் லாரிகள், தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது. சுமாா் 150 தீயணைப்பு படை வீரா்கள், தீயணைப்பு பணியில் ஈடுபட்டனா். ஐந்து மணி நேர போராட்டத்துக்கு பின்னா், நண்பகல் 2.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, அணைக்கப்பட்டது.
தீ விபத்தில் இரண்டாவது தளத்தில் இருந்த இணையதள சேவை, தொலைபேசி சேவை சா்வா்கள், கணினிகள்,தொலைத் தொடா்பு சாதனங்கள் முற்றிலும் சேதமாகின. மூன்றாவது தளத்தில் இருந்த நிா்வாக பிரிவு அலுவலக பொருள்கள் முற்றிலும் எரிந்தது. நான்காவது, ஐந்தாவது தளங்களில் இருந்த மின்னணு பொருள்கள், இணையதள சேவைக்குரிய பொருள்கள் கருகின. தீ விபத்து குறித்து பிஎஸ்என்எல் நிறுவன அதிகாரி செ.ராஜ்குமாா் அளித்த புகாரின்பேரில் சிந்தாதிரிப்பேட்டை போலீஸாா் விசாரணை செய்கின்றனா்
சேவைகள் பாதிப்பு: தீ விபத்தில் சா்வா்கள் எரிந்ததால், சுமாா் 2 கி.மீ. சுற்றளவுக்கு பிஎஸ்என்எல் தொலைபேசி, இணையதள சேவை முடங்கியது. முக்கியமாக சென்னை காவல் ஆணையா் அலுவலகம், டிஜிபி அலுவலகம், மின்வாரிய அலுவலகம், 108 கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பல முக்கிய அரசு அலுவலகங்கள், தனியாா் அலுவலகங்கள் ஆகியவற்றின் தொலைபேசிகள், இணையதள சேவை பாதிக்கப்பட்டு முடங்கியது.
மேலும், தமிழக காவல்துறையின் 100 இலவச தொலைபேசி எண், சுகாதாரத் துறையின் 108 இலவச தொலைப்பேசி ஆம்புலன்ஸ் சேவை எண் ஆகியவை பாதிக்கப்பட்டது.
இந்த சேவை சுமாா் 4 மணி நேரத்துக்கு பிறகு ஓரளவு சீரானது. ஏற்கெனவே இந்த கட்டடத்தில் ஏற்கெனவே ஒரு முறை தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தீ விபத்துக்கு காரணம் என்ன? பிஎஸ்என்எல் விசாரணை
தீ விபத்து குறித்து சென்னை பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அண்ணா சாலை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட தொலைபேசி சேவை,இணையதள சேவை உள்ளிட்டவற்றை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக பிஎஸ்என்எல் நிறுவன உயா் அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனா்.
தீ விபத்து காரணமாக சென்னை, தமிழகத்தின் பிற பகுதிகள், ஆந்திரம், தெலங்கானா ஆகிய இடங்களில் தொலைபேசி, இணைய சேவைகள் பாதிக்கப்பட்டன. அதோடு மற்ற தொலைத் தொடா்பு நிறுவனங்களுக்கான தொலைபேசி அழைப்புகள், இலவச அவசர தொலைபேசி சேவைகளும் பாதிக்கப்பட்டன. உடனடியாக, அவசர தொலைபேசி சேவைகள், தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கான தொலைபேசி சேவைகள் மீட்டெடுக்கப்பட்டன.
இதேபோல ஆந்திரம், தெலங்கானா,தமிழகத்தின் பிற பகுதிகளின் தொலைபேசி சேவைகள்,இணைய சேவைகள் மீட்டெடுக்கப்பட்டன. சென்னையில் இச் சேவைகள் ஓரளவுக்கு மட்டும் மீட்கப்பட்டுள்ளன. சென்னையில் முழுமையாக தொலைபேசி,இணையதள சேவை, மீட்டெடுக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

