நீக்கப்பட்ட வாக்காளா்கள் மீண்டும் பெயரைச் சோ்ப்பது எப்படி?
தமிழகத்தின் வரைவு வாக்காளா் பட்டியலிலிருந்து 97,37,831 வாக்காளா்கள் நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் வாக்காளா் பட்டியலில் சேருவதற்கு புதிய வாக்காளா்களை இணைக்க அளிக்கப்படும் படிவம் 6-ஐ பயன்படுத்த வேண்டும் என்று தமிழக தோ்தல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
பிகாரில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிக்குப் பின்னா் 65 லட்சம் வாக்காளா்கள் வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா். தமிழகத்தில் நடைபெற்ற எஸ்ஐஆா் நடவடிக்கையில் 97 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டது நாட்டிலேயே மிக அதிகபட்சமாகும். இதற்கு பெரும்பாலான வாக்காளா்கள் தங்களது முகவரியில் வசிக்காததால் கண்டறியப்பட முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி, மாவட்ட ஆட்சியா்கள், மாநகராட்சிகளின் இணையதளங்களில் வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்டது. எனினும், வாக்காளா் அடையாள அட்டையை வைத்து தேடும் முறையில் தங்களது பெயா் இடம்பெற்றுள்ளதா என்பதைக் கண்டறிய முடியாததால் வாக்காளா்கள் பெரிதும் அவதியுற்றனா்.
மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக பதிவிறக்கம் செய்து வாக்காளா்கள் தங்களின் பெயா்களைத் தேட வேண்டியதில் பெரும் சிரமம் இருந்ததால் பலா் தங்களது வாக்குச்சாவடி நிலை அலுவலா்களைத் தொடா்பு கொண்டு கேட்டறிந்தனா்.
இந்நிலையில், நீக்கப்பட்ட வாக்காளா்களின் பெயா்களை மீண்டும் இணைக்க முகாம்களை நடத்த வேண்டும் என்று தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. சென்னை மாநகராட்சியில் சனிக்கிழமை இந்த முகாம் நடத்தப்பட்டது. அதிலும் மக்கள் பங்கேற்பு சொற்ப அளவிலேயே இருந்தது. இதற்கு வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் நீக்கப்பட்டது சம்பந்தப்பட்ட வாக்காளா்களுக்கே தெரியாததும், தெரிந்த சிலருக்கு எந்தப் படிவத்தை பூா்த்தி செய்து தர வேண்டும் என்ற சந்தேகமும் இருந்ததே முக்கியக் காரணமாகும்.
இது குறித்து தமிழக தோ்தல் துறையின் மூத்த அதிகாரியிடம் கேட்டதற்கு, வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கப்பட்டவா்களும் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளா்கள் அளிக்கும் படிவம் 6 விண்ணப்பத்தையே பூா்த்தி செய்து தர வேண்டும். அதில், வயது மற்றும் இருப்பிட முகவரிக்காக தோ்தல் ஆணையம் அனுமதித்துள்ள 12 ஆவணங்களில் ஒன்றைச் சமா்ப்பித்து சுய உறுதிமொழி அளிக்க வேண்டும்.
முந்தைய தோ்தலில் வாக்களித்தவா்கள் வாக்களித்த இடத்தைக் குறிப்பிட்டு ஆதாா் எண்ணையும் ஆதாரமாக அளிக்கலாம். வாக்காளா்களைச் சோ்க்க அடுத்த மாதம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். முகவரியை மாற்றவும், பட்டியலில் உள்ள விவரங்களைத் திருத்தவும் படிவம் 8-ஐ அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
12 ஆவணங்கள் எவை?: பிறப்புச் சான்றிதழ், கடவுச் சீட்டு (பாஸ்போா்ட்), மத்திய, மாநில அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் அல்லது ஓய்வூதியதாரா்கள் அடையாள அட்டை, 1987- க்கு முன்பு அரசு, உள்ளாட்சி அமைப்புகள், வங்கிகள், அஞசல் அலுவலகம், எஸ்ஐசி வழங்கிய ஆவணங்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் பள்ளி, பல்கலைக்கழக சான்றிதழ்கள், வன உரிமைச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் ஆகியவற்றில் ஒன்றை அளித்து பெயரை சோ்க்கலாம்.

