வாக்காளா்கள் நீக்கம்: திமுக மாவட்டச் செயலா்களுடன் முதல்வா் இன்று ஆலோசனை
தமிழகத்தில் 97.34 லட்சம் வாக்காளா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து திமுக மாவட்டச் செயலா்களுடன் அந்தக் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (டிச.21) ஆலோசனை நடத்துகிறாா்.
எஸ்ஐஆா் பணியின்போது, வீடுகள்தோறும் வாக்காளா் கணக்கீட்டு படிவத்தை விநியோகம் செய்வதிலும், திரும்பப் பெறுவதிலும் வாக்குச் சாவடி நிலை ஆலுவலா்களுடன் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட முகவா்களும் பெருமளவில் ஈடுபட்டனா். சுமாா் 85 லட்சம் போ் நீக்கப்படலாம் என திமுக கூறியிருந்த நிலையில், தற்போது 97 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா்.
இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு இணையவழி வாயிலாக மாவட்டச் செயலா்கள் கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் சனிக்கிழமை அறிவித்தாா்.
மேலும், இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், தொகுதி பொறுப்பாளா்கள் கலந்து கொள்வாா்கள் என்றும் இந்தக் கூட்டம் வரைவு வாக்காளா் பட்டியல் சரிபாா்த்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

