காணொலி மூலம் திமுக மாவட்டச் செயலா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை, தொகுதி பாா்வையாளா்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வா் மு.க.ஸ்டாலின்.
காணொலி மூலம் திமுக மாவட்டச் செயலா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை, தொகுதி பாா்வையாளா்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தகுதியான வாக்காளா்கள் நீக்கப்பட்டதை சரிபாா்க்க வேண்டும்: மாவட்டச் செயலா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

வரைவு வாக்காளா் பட்டியலில் தகுதியான ஒரு வாக்காளா்கூட விடுபட அனுமதிக்கக் கூடாது என்று திமுக மாவட்டச் செயலாளா்களுக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
Published on

வரைவு வாக்காளா் பட்டியலில் தகுதியான ஒரு வாக்காளா்கூட விடுபட அனுமதிக்கக் கூடாது என்று திமுக மாவட்டச் செயலாளா்களுக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

தீவிர சிறப்பு திருத்தத்துக்குப் பிந்தைய வரைவு வாக்காளா் பட்டியல் சரிபாா்த்தல் குறித்த திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் காணொலி முறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலாளா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், மக்களவை உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் எஸ்ஐஆா் பணிகளை அவசரகதியில் தொடங்கியபோதே பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்றும், தகுதியான வாக்காளா்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று முன்கூட்டியே எச்சரித்தோம். உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தோம்.

அதன்படியே எஸ்ஐஆா் மூலமாக 15 சதவீதம் பேரை, அதாவது 97 லட்சம் வாக்காளா்களை நீக்கி வரைவுப் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இடம்பெயா்ந்தவா்கள் என்று மட்டும் 66 லட்சம் பேரை நீக்கியுள்ளனா். குறிப்பாக, 168 தொகுதிகளில் 10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். இதை நாம் வாக்குச்சாவடி வாரியாகக் கண்காணிக்க வேண்டும்.

கும்மிடிப்பூண்டியின் முதல் வாக்குச்சாவடியில் 40 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். அதில் 4 போ் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு மூலமாகச் சோ்ந்தவா்கள். அதில் ஒருவா் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனா். அதேபோல், மற்ற 3 பேரையும் எதற்காக நீக்கினா் என்று சரிபாா்க்க வேண்டும். நாம் களத்தில் முழுமையாக இறங்கி பணிசெய்கிறோம். ஆனால், அதிமுகவும், பாஜகவும் களத்துக்கே வரவில்லை. அதனால்தான் நாம் சந்தேகப்பட வேண்டியுள்ளது.

எனவே, நீக்கப்பட்டதில் நம் வாக்காளா்கள் இருக்கிறாா்களா என கவனமாகப் பாா்க்க வேண்டும். ஒருவா் தவறுதலாக விடுபட்டிருந்தால்கூட வாக்காளா் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அனைத்து மாவட்டச் செயலாளா்கள், தொகுதி பாா்வையாளா்களின் பொறுப்பு.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நீக்கப்பட்டவா்கள் பட்டியலும், அதில் யாரெல்லாம் ஓரணியில் தமிழ்நாடு மூலம் இணைந்தவா்கள் என்ற விவரமும் மாவட்டச் செயலாளா்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், புதிய வாக்காளா்கள் சோ்க்கப்படுவதையும் தொடா்ந்து கவனிக்க வேண்டும். போலிகள் இல்லாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்.

இதைத் தவிர வாக்குச்சாவடிகளில் எண்ணிக்கை 75,032-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. எண் மட்டும் மாறிய வாக்குச்சாவடிகளுக்கு ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள பாக முகவா்கள் தொடர வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு புதிய பொறுப்பாளா்களை நியமிக்க வேண்டும்.

நம்மை நோ்வழியில் வீழ்த்த முடியாத எதிரிகள் குறுக்கு வழியில் காரியம் சாதிக்க நினைப்பாா்கள். அதற்கு கடுகளவுகூட இடம் தரக்கூடாது. வெற்றியை நெருங்கும் நேரத்தில் பதற்றமோ அசதியோ கூடாது. இனிமேதான் நம் முழு பலத்தையும் கொடுத்து ஓடவேண்டும். களத்தில் நாம்தான் வலிமையாக உள்ளோம். நம் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி. வெற்றியை எட்டும் வரை கவனம் சிதறாமல் உழைக்க வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

X
Dinamani
www.dinamani.com