ரயில்களில் தொடரும் விதிமீறல்கள்: பயணச்சீட்டு பரிசோதகர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியம்!

ரயில்களில் பயணச்சீட்டின்றி விதிமீறல்கள் அதிகரித்து வரும்நிலையில், பயணச்சீட்டு பரிசோதகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்...
ரயில்களில் தொடரும் விதிமீறல்கள்!
ரயில்களில் தொடரும் விதிமீறல்கள்!
Updated on
2 min read

ரயில்களில் பயணச்சீட்டின்றி பயணம் உள்ளிட்ட விதிமீறல்கள் அதிகரித்து வரும்நிலையில், பயணச்சீட்டு பரிசோதகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

தேசிய அளவில் ரயில்வே துறை 15 நிர்வாக மண்டலங்களாக உள்ளன. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தெற்கு மண்டலத்தில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு என 6 கோட்டங்கள் உள்ளன.

சென்னையிலிருந்து தினமும் சுமார் 170 பயணிகள் ரயில்களும், சுமார் 850-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் மற்றும் சென்னை புறநகர் பகுதிக்கு 580-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கடந்த 2023-2024- இல் சுமார் 33 கோடியாக இருந்த பயணிகள் எண்ணிக்கை 2024-2025 -இல் 73 கோடியாக உயர்ந்துள்ளது. வந்தே பாரத் ரயிலில் ஆண்டுக்கு 33 லட்சம் பேரும், சென்னை புறநகர் ரயில்களில் தினமும் சுமார் 13 லட்சம் பேரும் பயணிக்கின்றனர்.

ரயில் பயணிகளில் டிக்கெட் இன்றி பயணித்ததாக 2022- 2023- ஆம் ஆண்டில் 17 லட்சத்து 34 ஆயிரத்து 698 பேர் மீது மொத்தம் ரூ.97.47 கோடியும், 2023-2024 -ஆம் ஆண்டில் 13 லட்சத்து 30 ஆயிரத்து 645 பேரிடம் ரூ.82.90 கோடியும், 2024-2025- ஆம் ஆண்டு அக்டோபர் வரை 15 லட்சத்து 05 ஆயிரத்து 53 பேரிடம் ரூ.89.05 கோடியும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளன.

பயணச்சீட்டு பரிசோதனைக்கு தெற்கு ரயில்வேயில் மொத்தம் சுமார் 2,000 பரிசோதகர்கள் உள்ளனர். இதில், சென்னை கோட்டத்தில் மட்டும் 856 பேர் உள்ளனர். 5 குளிர்சாதன பெட்டிகளுக்கு 1 பரிசோதகரும், 3 இரண்டாம் வகுப்பு பெட்டிகளுக்கு ஒரு பரிசோதகரும் இருக்க வேண்டும் என்பதே ரயில்வே வாரிய விதி. ஆனால், அதற்கு குறைவான எண்ணிக்கையிலேயே தற்போது பரிசோதகர்கள் உள்ளனர் என்கிறார் எஸ்ஆர்எம்யூ சங்க நிர்வாகி யுவராஜ்.

ஆள்பற்றாக்குறையால் சதாப்தி போன்ற ரயில்களில் சில நேரங்களில் ஒரே ஒரு டிக்கெட் பரிசோதகரே பணியில் உள்ளனர். இதுபோன்ற நேரங்களில் விதிமீறும் பயணிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கமுடிவதில்லை. அதோடு, விதிமீறும் பயணிகளால் பரிசோதகர்கள் தாக்கப்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ரயிலில் மது போதையில் தகராறில் ஈடுபட்டதாக கடந்த 2024- ஆம் ஆண்டு 8,200 பேர் மீது வழக்குப்பதிந்த நிலையில், நிகழாண்டில் இதுவரை 7,600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2024 -ஆம் ஆண்டு ரயில் டிக்கெட்டுகளை இடைத்தரகராக இருந்து விற்பனை செய்ததாக 400 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், நிகழ் ஆண்டில் கடந்த செப்டம்பர் வரை 260 பேர் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ரயில் பெட்டிகளில் அபாயச் சங்கிலிகளை உரிய காரணமின்றி இழுத்து நிறுத்தியதாக 2024- ஆம் ஆண்டில் 2,700 பேர் மீதும், நிகழாண்டில் 2,200 பேர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரயில் பெட்டிகளின் படிக்கட்டுகளில் விதிமீறி பயணித்தோர் கடந்த 2024 -ஆம் ஆண்டு 3,950 பேர், கடந்த 9 மாதங்களில் 3,650 பேர். மகளிர் பெட்டிகளில் ஏறிய ஆண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகளில் தெரிந்தே அமர்ந்து பயணித்தவர்கள் 2024-இல் 1,300 பேர், கடந்த 9 மாதங்களில் மட்டும் 2,761 பேராக உள்ளனர்.

ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப்போல, விதிமீறல்களும் அதிகரித்து வருகின்றன. ஆனால், அவற்றைத் தடுத்து நடவடிக்கை எடுப்பதற்கு பயணச்சீட்டு பரிசோதகர்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும் என எஸ்ஆர்எம்யு சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.

ரயில் பயணிகள் விதிமீறல் பிரச்னைகள் குறித்து தெற்கு ரயில்வே ஐ.ஜி. கே.அருள்ஜோதி கூறியதாவது: ரயில்வே சொத்துகளைப் பாதுகாப்பதுடன், ரயில் பயணிகளை பாதுகாப்பதிலும் உரிய விதிமுறைப்படி ரயில்வே பாதுகாப்புப் படையினர் செயல்படுகின்றனர். விதிகளை மீறுவோர் மீது 23 பிரிவுகளில் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கண்காணிப்பு கேமரா போன்றவையால் விதிமீறுவோர் யாரும் தப்பமுடியாது. ரயில்களில் திருட்டு உள்ளிட்டவற்றிலிருந்து பயணிகளைப் பாதுகாக்கும் வகையில் 4 மொழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பயணிகள் தவறவிட்ட பொருள்களையும் நவீன தொழில்நுட்ப வசதியால் உடனே மீட்டு ஒப்படைத்துள்ளோம். பயணிகளும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com