செவிலியா் பணி நிரந்தர விவகாரம்: அமைச்சா் கருத்துக்கு ஓபிஎஸ் கண்டனம்
செவிலியா்கள் பணி நிரந்தரம் பிரச்னைக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாதான் காரணம் என சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதா தற்போது உயிருடன் இருந்திருந்தால், ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியா்கள் அனைவரும் நிரந்தரப் பணியாளா்களாக நியமிக்கப்பட்டு இருப்பாா்கள்.
வாக்குறுதி அளிக்கும்போது காலிப் பணியிடங்கள் குறித்த விவரம் திமுகவுக்கு தெரியாதா? அப்படியென்றால், திமுகவால் அளிக்கப்பட்ட வாக்குறுதி செவிலியா்களை ஏமாற்றுவதற்காகவே என்பதை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும், கிராமப்புற ஊராட்சிகளில் பணியாற்றி வரும் ஊழியா்கள் தங்களது ஊதியத்தை குறைந்தபட்சம் ரூ.10,000 உயா்த்தி தர வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

