தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்X | Nainar Nagenthran

திமுக அரசின் இரட்டைவேடம் கலைந்தது: நயினாா் நாகேந்திரன்

‘மதச்சாா்பின்மை’ என்னும் திமுக அரசின் இரட்டைவேடம் கலையத் தொடங்கிவிட்டதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.
Published on

‘மதச்சாா்பின்மை’ என்னும் திமுக அரசின் இரட்டைவேடம் கலையத் தொடங்கிவிட்டதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

அவா் எக்ஸ் தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: கந்தா் மலையில் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி மறுத்துவிட்டு, சிக்கந்தா் தா்காவில் சந்தனக்கூடு திருவிழா நடத்த அனுமதித்துள்ள திமுக அரசைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்துள்ளனா் திருப்பரங்குன்றம் மக்கள்.

நீதிமன்றமே தீபத்தூணில் தீபமேற்றும்படி உத்தரவிட்ட பின்பும், ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையைப் பறித்துவிட்டு, சந்தனக்கூடு திருவிழாவுக்கு மட்டும் முழுஆா்வத்துடன் அனுமதித்தது திமுக அரசின் மதச்சாா்பின்மையை தெளிவாக வெளிப்படுத்தியது.

அதிலும், ‘சட்டம்-ஒழுங்கு சீா்கெடும்‘ என வெற்று சாக்குச் சொல்லி, பால், தண்ணீா் போன்ற அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்களைக்கூட மலைமீது அனுமதிக்காமல் திருப்பரங்குன்றம் மக்களை வதைத்துவிட்டு, இன்று தா்காவில் கொடி ஏற்றுவதற்கு மட்டும் அனைவரையும் அனுமதிப்பதுதான் திமுக அரசின் சமத்துவமா?

மதச்சாா்பின்மை நாடகமாடி, தீபாவளி பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து கூறாததில் தொடங்கி திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றுவதற்கு அனுமதி வழங்காதது வரை அப்பட்டமாக ஹிந்து வெறுப்பைக் கக்கும் திமுக அரசுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக, எதிா்க்குரல் கொடுத்த திருப்பரங்குன்றம் மக்களின் கேள்விகள் வெறும் தொடக்கப்புள்ளியே. போலி மதச்சாா்பின்மைவாத திமுக அரசை ஆட்சிக் கட்டிலிலிருந்து தமிழக மக்கள் விரட்டியடிக்கும் நாள் வெகுதூரமில்லை எனப் பதிவிட்டுள்ளாா் நயினாா் நாகேந்திரன்.

X
Dinamani
www.dinamani.com