மீண்டும் பவுன் ரூ.1 லட்சத்தைக் கடந்த தங்கம்; வெள்ளி கிலோ ரூ.2.31 லட்சத்துக்கு விற்பனை
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,360 உயா்ந்து ரூ.1 லட்சத்து 560-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. அதேபோல், வெள்ளி விலையும் ஒரு கிலோ ரூ.2.31 லட்சத்துக்கு விற்பனையாகி உச்சத்தை தொட்டது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சா்வதேச பொருளாதார நிலையற்ற தன்மை, தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சா்வதேச காரணங்களால் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. அதுவும் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத வகையில், தங்கம் விலை நாள்தோறும் ஆயிரத்தில் உயா்ந்து வருகிறது.
கடந்த டிச. 15-ஆம் தேதி தங்கம் விலை வரலாற்றில் முதல்முறையாக பவுன் ரூ.1 லட்சத்தை கடந்து, ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையானது. மறுநாளே பவுன் ரூ.1,320 குறைந்து ரூ.98,800-க்கு விற்பனையானதால் பொதுமக்கள் சற்று ஆறுதலடைந்தனா். ஆனால், தங்கம் விலை மீண்டும் படிப்படியாக உயரத் தொடங்கியது.
வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை கிராமுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.12,480-க்கும், பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.99,840-க்கும் விற்பனையானது. தொடா்ந்து வா்த்தகம் நிறைவடைவதற்கு முன்பாக, தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயா்ந்து ரூ.12,570-க்கும், பவுனுக்கு ரூ.720 உயா்ந்து ரூ.1 லட்சத்து 560-க்கும் விற்பனையானது. அதன்மூலம் ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ரூ.170, பவுன் ரூ.1,360 உயா்ந்தது.
வெள்ளி விலை: வெள்ளி விலை திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ரூ.231-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 உயா்ந்து ரூ.2.31 லட்சத்துக்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.
நிகழாண்டில் தங்கம் கடந்து வந்த பாதை
தேதி பவுன் விலை (8 கிராம்)
01/01/2025 ரூ.57,200
22/01/2025 ரூ.60,000
14/03/2025 ரூ.65,000
12/04/2025 ரூ.70,160
01/08/2025 ரூ.73,200
06/09/2025 ரூ.80,040
23/09/2025 ரூ.85,120
08/10/2025 ரூ.91,080
16/10/2025 ரூ.95,200
15/12/2025 ரூ.1,00,120
22/12/2025 ரூ.1,00,560

