6 மாதங்களில் இரண்டாவது முறை: ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
ஆறு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக ரயில் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், சாலை நெரிசலை கட்டுப்படுத்துவதிலும், ஏழையெளிய மக்களை குறைந்த கட்டணத்தில் குறிப்பிட்ட நேரத்தில் குறித்த இடத்திற்கு அழைத்துச் செல்வதிலும், நீண்ட தூர சரக்குகளை கையாள்வதிலும் ரயில் போக்குவரத்து பெரும் பங்கினை வகிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. வாகன வரி உயர்வு, சுங்கக் கட்டண உயர்வு, பராமரிப்புச் செலவு ஆகியவற்றால் சாலைப் போக்குவரத்துக் கட்டணங்கள் கணிசமாக அவ்வப்போது உயர்ந்து வருகின்ற நிலையில், ஆறு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக ரயில் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
இந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் குளிர்சாதன வகுப்பிற்கான கட்டணத்தை ஒரு கிலோ மீட்டருக்கு இரண்டு பைசாவாகவும், சாதாரண வகுப்பிற்கான கட்டணத்தை ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசாவாகவும் உயர்த்தி அதன் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு ஓராண்டிற்கு கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்தது. இந்த உயர்வினை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று நான் ஏற்கெனவே அறிவிக்கை விடுத்திருந்தேன். ஆனால், எவ்விதமான அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை.
இந்தச் சூழ்நிலையில், வருகின்ற 26-ஆம் தேதி முதல் 215 கிலோ மீட்டர் மேல் சாதாரண வகுப்பில் பயணிப்போருக்கு கிலோ மீட்டருக்கு ஒரு பைசாவும், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் படுக்கை வசதி கொண்ட சாதாரண மற்றும் குளிர்சாதன பெட்டிகளில் பயணிப்போருக்கு கிலோ மீட்டருக்கு இரண்டு பைசாவும் உயர்த்தப்படும் என இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே சாதாரண வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் அதிகரித்து வருவதன் காரணமாக ரயில்வே நிர்வாகத்திற்கு மறைமுகமாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஆண்டிற்கு கூடுதல் வருவாய் கிடைக்கின்ற நிலையில், நாற்பது முதல் ஐம்பது விழுக்காடு வரை மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்ட சலுகை பறிக்கப்பட்டதன் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கின்ற நிலையில், ஆண்டிற்கு இரண்டு முறை இதுபோன்ற கட்டண உயர்வு என்பது நியாயமற்ற செயல்.
நாட்டில் தற்போது உயர்ந்து கொண்டே செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், மின் கட்டண உயர்வு, வாகன வரி உயர்வு, சுங்கச் சாவடி கட்டண உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஏழையெளிய மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில், தற்போது உயர்த்தப்பட்டுள்ள ரயில்வே கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் சார்பில் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Former Chief Minister O. Panneerselvam has urged the central government to roll back the train fare hike.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

