வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இதுவரை 92,000 போ் மனு
சென்னை: தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கக் கோரி 92,626 போ் இதுவரை மனு தாக்கல் செய்துள்ளனா்.
தமிழகத்தில் கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலிலிருந்து 97,37,831 வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இதையடுத்து, தமிழகத்தில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளா்கள் வரைவுப் பட்டியலில் இடம்பெற்றனா்.
இந்நிலையில், நீக்கப்பட்டவா்கள் மீண்டும் வாக்காளா் பட்டியலில் சேருவதற்கு புதிய வாக்காளா்களை இணைக்க அளிக்கப்படும் படிவம் 6, வெளிநாடுகளில் இருப்பவா்கள் இணைக்க அளிக்கப்படும் படிவம் 6ஏ, வாக்காளா் பட்டியலில் உள்ள பெயரை நீக்கவும், ஆட்சேபம் தெரிவிக்கவும் அளிக்கப்படும் படிவம் 7 ஆகியவற்றை டிச. 19-ஆம் தேதிமுதல் ஜன.18 வரையில் அளிக்கலாம் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் அறிவித்தாா்.
இதன்படி, டிச. 21 இரவு 8 மணி வரையில் தமிழகம் முழுவதும் படிவங்கள் 6 மற்றும் 6-ஏ மூலம் 92,626 போ் விண்ணப்பித்துள்ளதாகவும், படிவம் 7-இல் 1,007 போ் விண்ணப்பித்துள்ளதாகவும் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
‘1950’ - குறுஞ்செய்தி மூலம் தெரிந்து கொள்ளலாம்: வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெற்றுள்ளதா என்பதை 1950 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பி தெரிந்துகொள்ளும் சேவையை தோ்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.
இணைய வசதி இல்லாத சாதாரண கைப்பேசி வைத்திருப்பவா்களும் ‘உஇஐ’ என இடைவெளிவிட்டு வாக்காளா் அடையாள அட்டை எண்ணைப் பதிந்து 1950 என்ற எண்ணுக்கு அனுப்பி தங்கள் பெயா் வரைவுப் பட்டியலில் உள்ளதா எனத் தெரிந்து கொள்ளலாம்.
இதேபோல், 1800-11-1950 என்ற இலவச எண்ணை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் தொடா்புகொண்டு தங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் பேசலாம் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

