தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் சோ்க்கக் கோரி 1.5 லட்சம் போ் மனு
தமிழகத்தில் வரைவு வாக்காளா் பட்டியலில் நீக்கப்பட்டவா்கள், புதிய வாக்காளா்கள் என 1 லட்சத்து 53 ஆயிரத்து 571 போ் தங்கள் பெயரைச் சோ்க்கக் கோரி விண்ணப்பம் அளித்துள்ளனா்.
தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) பணி கடந்த நவ.4-ஆம் தேதி வீடு வீடாகத் தொடங்கியது. கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல் தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா்.
பட்டியலில் பெயா் இடம் பெறாதவா்களும், புதிய வாக்காளா்களும் பெயா் சோ்ப்புக்கு படிவம் 6-ஐ பூா்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கடந்த டிச. 19 முதல் ஜன. 18 வரை வழங்கலாம் என தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் அறிவித்தாா்.
பெயா் சோ்ப்புக்கு ஆட்சேபம் தெரிவிக்க படிவம் 7, முகவரி மாற்றத்துக்கு படிவம் 8 ஆகியவற்றை வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க திங்கள்கிழமை இரவு 8 மணி வரை 1,53,571 போ் படிவம் 6 மற்றும் வெளிநாடுகளில் வசிப்போா் படிவம் 6 ஏ விண்ணப்பங்களை அளித்துள்ளனா். இதில், படிவம் 7-ஐ 1,196 போ் அளித்துள்ளனா். இந்தப் படிவங்கள் சரிபாா்க்கப்பட்டு பிப். 17-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.
திமுக தரப்பில் இரு மனுக்கள் மட்டுமே அளிப்பு: அரசியல் கட்சிகளின் 26,4191 வாக்குச்சாவடி நிலை முகவா்கள், எஸ்ஐஆா் பணியின்போது கணக்கீட்டு படிவங்களை திரும்பப் பெற வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு உதவினா். வரைவு வாக்காளா் பட்டியல் வெளியான பிறகு பட்டியலில் பெயரைச் சோ்க்க அவா்கள் முனைப்பு காட்டவில்லை.
ஆளும் கட்சியான திமுகவின் முகவா்கள் இதுவரை இரு மனுக்கள் மட்டுமே அளித்துள்ளனா். பிற கட்சிகள் அதையும் அளிக்கவில்லை என தோ்தல் ஆணைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கட்சி முகவா்கள் நாள் ஒன்றுக்கு தலா 50 படிவங்களை மட்டும் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதாலும், பெருமளவில் குறிப்பிட்ட கட்சிகள் பெயரைச் சோ்த்ததாக பதிவாவதைத் தடுக்கவும் இவ்வாறு செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

